100 வயது ஆனால் என்ன? சேலை வியாபாரத்தில் கலக்கும் மும்பை பாட்டி

100 வயது ஆனால் என்ன? சேலை வியாபாரத்தில் கலக்கும் மும்பை பாட்டி
100 வயது ஆனால் என்ன? சேலை வியாபாரத்தில் கலக்கும் மும்பை பாட்டி

சதாபொழுதும் அய்யோ வயசாச்சே… என்று வயதை நினைத்துக் கலங்கும் உலகில் நூறு வயதில் டிசைனர் சேலைகளைச் செய்து வியாபாரத்தில் கொடிகட்டுகிறார் மும்பையில் வசிக்கும் கேரள பாட்டி பத்மம் என்கிற பத்மாவதி நாயர்.  காலத்தை மீறிச் செயல்படும் அவர், கைகளால் டிசைன்களை வரைந்து புதுமையான சேலைகளை உருவாக்கி வருகிறார். வயதை மீறிய உற்சாகத்துடன் செயல்படும் பத்மம், மற்றவர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் தருகிறார். இவரைப் பற்றி தபெட்டர் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

1920-ஆம் ஆண்டில் பிறந்து 100 வயதை எட்டியுள்ள அவர் சொல்லும் மந்திரமே இதுதான்: “எப்போதும் பிஸியாக இருங்கள். மற்றவர்களுடைய பிரச்னைகளில் தலையீடாதீர்கள்”. தினமும் மூன்று மணி நேரம் வேலை என்பதை இலக்காக வைத்துள்ளார். அதற்குள் அவருக்கான அன்றைய பணிகளை முடித்துவிடுகிறார். “எனக்கு ஓவியங்கள் வரைவதில் திருப்தி கிடைக்கிறது” என்கிறார்.

காலையில் 5.30 மணிக்கு எழும் அந்த பாட்டி, தேநீர் மற்றும் காலை உணவை முடித்து அன்றைய நாளிதழ்களை ஆர்வத்துடன் படித்து முடிக்கிறார். 10.30 மணிக்கு தன் பணிக்குச் செல்லும் அவர், வண்ணங்கள், தூரிகைகள் நிறைந்த உலகில் மதியம் ஒரு மணி வரை செலவிடுவார் என்று கூறுகிறார் அவரது மகள் லதா.  

நூறு வயதில் பத்மம் பாட்டி உருவாக்கும் டிசைனர் சேலைகள் அதிக நேரத்தையும் உழைப்பையும் எடுத்துக் கொள்ளக்கூடியவை. அனைத்தும் நுணுக்கமாக செய்யவேண்டிய அழகியல் வேலைப்பாடுகள். ஆனால் அவரால் டிசைன் செய்யப்பட்டு உருவாக்கப்படும் சேலைகள் தரத்தில் உயரத்தில் இருக்கின்றன. முதலில் அவுட்லைன் செய்து, அதனை வண்ணங்களால் நிரப்புகிறார். பலதரப்பட்ட துணி வகைகளைக் கொண்ட சேலைகளிலும் ஓவியங்கள் தீட்டுகிறார். “துஸார் சில்க்கில் பணியாற்றுவதுதான் கொஞ்சம் சவாலானது” என்கிறார் பத்மம்.

ஒரு சேலையை முடிப்பதற்கு ஒரு மாதம்கூட செலவாகும். டிசைனர் சேலை விற்பனையில் வரும் பணத்தை தன்னுடைய பேரன் பேத்திகளுக்காகச் செலவிடுகிறார். தனக்காக எதையும் அவர் வைத்துக்கொள்வதில்லை என்று நெகிழ்ந்து பேசுகிறார் மகள் லதா.  

இந்தப் பாட்டி தயாரிக்கும் ஒரு சேலையின் விலை ரூ. 11 ஆயிரம். துப்பட்டாவின்  விலை ரூ. 3 ஆயிரம். அதுவும் சேலை விலையுடன்  உள்ளடக்கியதுதான். தான் உருவாக்கிய முதல் டிசைனர் சேலை பற்றிய நினைவுகள் பத்மம் பாட்டியிடம் பத்திரமாக இருக்கின்றன. தன் கலைத்திறன் மூலம் அறுபது வயதுகளில் சொந்தமாக வருமானம் பார்க்கத் தொடங்கியுள்ளார். 

திருச்சூர் வடக்கன்சேரியில் பத்துக் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஒன்பதாவதாகப் பிறந்தார் பத்மம். இளமைப்பருவத்தை கேரளத்தில் கழித்த அவர், திருமண வாழ்க்கைக்குப் பிறகு மும்பைக்கு வந்துவிட்டார். தன்னுடைய ஐந்து  குழந்தைகள் வளரும்போதே, சேலையில் ஓவியங்கள் தீட்டும் ஆர்வத்தையும் கூடவே வளர்த்துக்கொண்டார். ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்குத் தேவையான குர்தா, பைஜாமா போன்ற ஆடைகளை தயாரித்துக் கொடுத்தார். இன்று அவர் எள்ளுப் பேரன் பேத்திகளையும் பார்த்துவிட்டார்.

அழகிய கைவேலைப்பாடுகள் கொண்ட சேலைகளை அவர் உருவாக்கத் தொடங்கியது குடும்பம் செட்டிலான பிறகுதான். “ஆரம்ப நாட்களில் சிறிய அளவில் என் மகளுக்குச் செய்துவந்தேன். அவள்தான் எனக்கான ஊக்கமாக அமைந்திருந்தாள்” என்கிறார். அறுபது வயதில் தொடங்கிய ஒரு பொழுதுபோக்கு, 100 வயதில் அவரது அடையாளமாக மாறியிருக்கிறது. 

“நூறு வயதில் நான் சம்பாதிக்கக்கூடாதா” என்று சிரித்துக்கொண்டே கேட்கும் பத்மம் பாட்டி சமூகவலைதளங்களில் புகுந்து விளையாடுகிறார். வாட்ஸ் ஆப் பயன்படுத்துகிறார். பேரக்குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசுகிறார். நண்பர்களுக்கு இமெயில் அனுப்புகிறார். இனி வேறென்ன வேண்டும்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com