#பேசாதபேச்செல்லாம் - 1 : இணையருடன் காமம் கொள்ள சரியான நேரம் பகலா இரவா?-மருத்துவர் விளக்கம்
இரவும் காமமும் பிரிக்க முடியாதது. தமிழ் சினிமாவில்கூட பகல் வெளிச்சத்தில் காமம் சார்ந்த பாடல்களை நம்மால் அதிகம் பார்க்க முடியாது. அமைதி, இருள் என அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இரவில் மட்டும்தான் உறவு கொள்ள வேண்டுமா? பகல் என்ன பாவம் செய்தது? பகலில் செக்ஸ் வைத்துக்கொள்ளவே கூடாதா?
இந்தக் கேள்விகள் எல்லோருக்கும் உண்டு; ஆனால் பதில்கள் தான் தெரிவதில்லை. பகலில் உடலுறவு என்பதில் இருக்கும் பொதுவான சந்தேகங்கள், பயம் மற்றும் சிக்கல்கள் என்னென்ன, இவற்றைக் களைய மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை உளவியலாளர் Dr. சுஜிதாவிடம் கேட்டோம்.
பொதுவாக உடலுறவு என்பது ஒருவருடைய உணர்ச்சிகளைப் பொருத்தது. ஒருவருக்கு ஹார்மோன் தூண்டப்பட்டு எப்போது உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது தனது இணையுடன் இணைந்து தங்களுக்குள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உடலுறவில் ஈடுபடுவர். அதற்கு இரவு, பகல் என்று கால வித்தியாசங்கள் இருக்காது. பெரும்பாலும் தம்பதிகள் இரவு நேரங்களில் உடலுறவு வைத்துக்கொள்ள காரணம், பகல் நேரங்களில் போன் கால்கள், தெரிந்தவர்கள் வீட்டிற்கு வருதல் போன்ற பிரச்னைகள்தான். இரவில் எந்த தொந்தரவும் இருக்காது. அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ரிலாக்ஸாக தாம்பத்தியத்தில் ஈடுபடுவது முழு உணர்ச்சிகளையும் இடையூறு இல்லாமல் வெளிப்படுத்த ஏதுவாக இருக்கும்.
பகல்நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது உணர்ச்சிகள் மேலோங்கினால் தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதில் தவறேதும் இல்லை. ஆனால் உடலுறவுக்கு முன் உணர்ச்சிகள் உருவாகிக் கொண்டிருக்கும்போது ஏதேனும் செல்போன் அழைப்புகளோ, இடையூறுகளோ வந்துவிட்டால் உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு உடலுறவிலுள்ள ஆர்வம் குறைந்து தடைபட்டுவிடும்.
குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளால் இரவு நேரத்தில் உடலுறவில் ஈடுபடமுடியாது என்பவர்கள் பகல்நேரத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம். ஆனால் அப்போது செல்போனை சைலண்ட் மோடில் போட்டு வைப்பது, வீட்டிற்கு யாரும் வந்து தொந்தரவு செய்யாமல் இருப்பது போன்றவற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இரவு நேரத்தில் தாம்பத்தியத்தைத் தேர்ந்தெடுக்க மற்றொரு காரணம், பகல் நேரத்தில் வெளிச்சம் மற்றும் சீதோஷணம் போன்றவை ஒத்துழைக்காததுதான். அதேசமயம் தற்போது ஏசி போன்ற வசதிகள் வந்துவிட்டதால் பெட்ரூமில் இருட்டான ஒரு சூழலை, நீலநிற லைட்டிங் போன்றவற்றை உருவாக்குவதும் உடலுறவு கொள்ள விரும்பும் மனநிலையைத் தூண்டும். ரிலாக்ஸாகவும், பாசிட்டிவாகவும் தோன்றவைக்கும்.
இதில் கவனிக்கவேண்டிய மற்றொரு விஷயம், உடலுறவுக்கு பின்னான ஓய்வு. பகல்நேரத்தில் உடலுறவு வைத்துக்கொண்டால் அதன்பிறகு ஏதேனும் ஒரு வேலை கண்டிப்பாக இருக்கும். வெளியே செல்வதுபோன்ற சூழல் ஏற்படலாம். உறக்கம் இருக்காது. அதனால் உடலுறவு வைத்துக்கொண்ட பலனை முழுமையாக அடையமுடியாமல் போய்விடும். அதனால்தான் பெரும்பாலும் இரவு நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதை பரிந்துரைக்கின்றனர்.
உடலுறவு கொள்ள நினைத்தவுடனே மூளையிலுள்ள லிம்பிக் சிஸ்டம் தூண்டப்படுகிறது. ஞாபக சக்தி, பயம், முரட்டுத்தனம் போன்ற பலவிதமான உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதுதான் லிம்பிக் சிஸ்டம். இந்த லிம்பிக் சிஸ்டம் இயங்க ஆரம்பித்தவுடனே பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனும், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனும் சுரக்க ஆரம்பித்துவிடும். இந்த ஹார்மோன்கள் குளுமையான மற்றும் இரவு நேரங்களில் நல்ல ஃபீலை கொடுக்கும். இதனால்தான் தம்பதியர் பகலில் உடலுறவு கொள்ளும்போது தொந்தரவுகள் மற்றும் சீதோஷணம் ஆகியவற்றை கருத்தில்கொள்ள வேண்டும்.
இதுதவிர உடலுறவு கொள்ளும்போது ‘மகிழ்ச்சி ஹார்மோன்’ என்று அழைக்கப்படுகிற டோபோமைன் என்ற ஹார்மோனும் சுரக்கிறது. உடலுறவு ஹார்மோன்களுடன் இந்த மகிழ்ச்சி ஹார்மோனும் சுரக்கும்போதுதான் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒருவித மகிழ்ச்சியுடன் கலந்த மனநிறைவு கிடைக்கிறது. பகல்நேரத்தில் இடையூறுகள் ஏற்படும்போது டோபோமைன் சுரப்பு குறைந்து இன்பமும் நிறைவுறுவதில்லை.
பகலோ, இரவோ… உங்கள் பார்ட்னருடன் பேசி களித்து, நேரமெடுத்து, உடலுறவு கொள்ளுங்கள். அது தரும் நிம்மதியும் அமைதியும்தான் உங்கள் வாழ்வின் தரத்தை மேம்படுத்தும்.
காமம் சார்ந்த சந்தேகங்களுக்கு மருத்துவர் மற்றும் நிபுணர்களிடம் பேசி அவர்கள் தரும் பதிலை உங்களுக்குத் தந்துகொண்டிருக்கிறோம். உங்கள் சந்தேகங்களை கமெண்ட்டில் கேளுங்கள்.