காண கண்கொள்ளா அழகில் சாந்தம்பாறை.. 12 ஆண்டுகளுக்கு பின் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி

காண கண்கொள்ளா அழகில் சாந்தம்பாறை.. 12 ஆண்டுகளுக்கு பின் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி
காண கண்கொள்ளா அழகில் சாந்தம்பாறை.. 12 ஆண்டுகளுக்கு பின் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி

இடுக்கியில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது பூத்திருக்கிறது. இது அப்பகுதி மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எப்போதும் குளிர், கதவை திறந்தாலே முகத்தில் முத்தமிட்டு செல்லும் ஈரக்காற்று, காணும் இடமெல்லாம் பச்சை பசேலென்ற செடி கொடிகள், மலை முகடுகளை தழுவிச்செல்லும் மேகக் கூட்டங்கள், வன விலங்குகள் பறவைளின் ஓசைகள்.... இப்படி ஒரு இடமிருந்தால், அங்கிருந்து திரும்பி செல்ல நினைப்போமா நாம்? இல்லைதானே...! இப்படி விட்டுப்பிரிய மனம் வராத அளவிற்கு, சொல்லில் அடங்காத பல சிறப்புகளுக்கு சொந்தமானது, மலையும் மலை சார்ந்ததுமானது கேரளாவின் இடுக்கி மாவட்டம். இடுக்கியின் இந்த அழகிற்கு மேலும் ஒரு க்ரீடமாய் மாறியுள்ளது, நீலக்குறிஞ்சி மலர்கள். ஆம்... இப்போது, மேற்குத்தொடர்ச்சி மலையெங்கும் நீலக்கம்பளம்தான்!

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரானது, இடுக்கி மாவட்டம் மூணார் பகுதி வழியாக நீள்கிறது. இடுக்கியின்  சுற்றுப்புற மலைகள் அனைத்தும் கடல் மட்டத்தில் இருந்து குறைந்தது 1,300 மீட்டர் உயரத்திலிருந்து, அதிகபட்சமாக 3,500 மீட்டர் உயரம் கொண்டவையாக இருக்கின்றன.

இந்த மலைகளில் மரங்கள் இல்லாத வெயிலடி படும் மலைக்குன்றுகளில் 30 முதல் 60 சென்டிமீட்டர் உயரத்தில் வரும் நீலக்குறிஞ்சி செடிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் கடந்த 2006ம் ஆண்டு பூத்தன. அதற்குப்பின் 12 ஆண்டுகள் கழித்து கடந்த 2018ம் ஆண்டு மீண்டும் பூத்தன. அந்தநேரத்தில் இரவிகுளம் தேசிய பூங்கா, ராஜமலை, கொழுக்குமலைகளில் நீலக்கம்பளம் வீரித்தாற்போல் மலைச்சரிவுகளில் தலையாட்டியாவறு பூத்துக்குலுங்கிய இந்த நீலக்குறிஞ்சி மலர்களால் மூணார் பகுதி முழுக்க திருவிழாக்கோலம் பூண்டது. அது கொரோனா முடக்கம் இல்லாத காலம் என்பதால் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மூணாறுக்கு வந்து, குறிஞ்சி மலர்களை கண்டு ரசித்தனர்.

2020-ம் ஆண்டு இடுக்கி மாவட்டத்தின் சில புதிய மலைப்பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்திருந்தது. இது, உள்ளூர்வாசிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக பூப்பாறைக்கு அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள  தோண்டிமலை, நெடுங்கண்டம் அருகே புஷ்பகண்டம் மலைகளில் நீலக்குறிஞ்சிகள் பூத்தன. இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் செல்லும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் சாந்தம்பாறை பகுதிகளிலும், நீலக்குறிஞ்சிகள் தற்போது பூத்திருக்கின்றன.

12 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இப்படி நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்ததே இல்லை என்பதால் அப்பகுதி மக்கள் ஆச்சர்யமும் ஆனந்தமும் அடைந்தனர்.

வெண்பஞ்சு போல மூடுபனி மலைகளை தழுவிச் செல்ல, ஈரக்காற்றுக்கு ஆடி இதயத்துள் பதியும் இந்த நீலக்குறிஞ்சி மலர்களை இந்த ஆண்டும் கொரோனா விதிமுறைகளால் வெளி மாநில, வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ”கொரோனா முடக்கத்தால் தவித்த உள்ளூர் மக்களுக்கு புதிய பகுதிகளில் பூத்திருக்கும் இந்த நீலக்குறிஞ்சி மலர்கள் புது வசந்தத்தை அளித்திருக்கிறது.

மனதை மயக்கும் இந்த மலர்கள், மலையெங்கும் படர்ந்திருப்பது, அப்பகுதி மக்களை விவரிக்க முடியாத மகிழ்ச்சிக்குள் கொண்டு சென்றுள்ளது. சொல்லுக்குள் அடங்காத இந்த பூ வசந்தத்தை, இடுக்கி மக்கள் கொண்டாடி வருகின்றனர்!

வி.சி.ரமேஷ் கண்ணன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com