“பாஜகவால் அதிமுக தோற்கும்; கமலை ஏற்கமாட்டார்கள்” - டிராபிக் ராமசாமியின் கடைசி பேட்டி

“பாஜகவால் அதிமுக தோற்கும்; கமலை ஏற்கமாட்டார்கள்” - டிராபிக் ராமசாமியின் கடைசி பேட்டி
“பாஜகவால் அதிமுக தோற்கும்; கமலை ஏற்கமாட்டார்கள்” - டிராபிக் ராமசாமியின் கடைசி பேட்டி

தமிழகத்தின் பிளக்ஸ் கலாச்சாரம் ஒழிப்பு உட்பட பல்வேறு சமூக பிரச்னைகளை கையிலெடுத்து அதில் வென்றவர் சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி. இவர் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சில வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்தார். தஞ்சையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கரிகாலசோழனுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய வந்த அவரிடம் ”புதிய தலைமுறை” சார்பாக பேட்டி எடுத்தோம். அந்த பேட்டியில் திமுக ஆட்சியமைக்கும், தினகரனால் பல இடங்களில் அதிமுக தோற்கும், கமலை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று பல கணிப்புகளை சொன்னார் அவர். அவர் கூறியதுபோலவே தேர்தல் முடிவு வந்துள்ள சூழலில், கணிப்புகளை சொன்ன ஓய்வறியா போராளி டிராபிக் ராமசாமி நேற்று காலமானார். 

கடந்த மார்ச் 25 ஆம் தேதி டிராபிக் ராமசாமி ‘புதிய தலைமுறை’ டிஜிட்டலுக்கு அளித்த பேட்டிதான் இறுதி நேர்காணலாக இருக்கக்கூடும். அந்த பேட்டியை அப்படியே மீண்டும் பதிவு செய்கிறோம்.

"நான் செல்லும் பக்கமெல்லாம் திமுகவுக்கு ஆதரவான மனநிலை இருப்பதையே பார்க்கிறேன். தினகரனால் அதிமுக தோற்கும்" என்று நமக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. 

இந்தத் தேர்தலில் உங்களின் நிலைப்பாடு என்ன? யாரை ஆதரிக்கிறீர்கள்?

"இந்த முறை எந்தக் கட்சியையும் நான் ஆதரிக்கவில்லை. எனது அமைப்பை சேர்ந்த 10 பேர் தமிழகத்தில் ஆரணி, கன்னியாகுமரி பேன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். தஞ்சாவூரில் என்னைப்போலவே சமூக சேவையில் ஈடுபட்டுவரும் சமூகப் போராளி கரிகால் சோழன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஒரு வாரமாக பரப்புரை செய்து வருகிறேன். இந்த 10 தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் யாரேனும் நல்லவர் இருந்தால் வாக்களியுங்கள் அல்லது நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் வலியுறுத்துகிறேன். இதுதான் எனது தேர்தல் நிலைப்பாடு."

நீங்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

"கடந்த 4 நாள்களாக தஞ்சையில் பிரசாரம் செய்கிறேன். இந்த ஊரில் பேருந்து நிலையம், மார்க்கெட், தெருக்களில் வாக்கு கேட்டு செல்லும்போது மக்கள் நன்றாக வரவேற்கிறார்கள், ஆதரிக்கிறார்கள். கடந்த தேர்தலை விடவும் மக்கள் நல்ல வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்கும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. நிச்சயமாக இவர்கள் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது."

தமிழகத்தில் இந்தத் தேர்தலில் யார் ஆட்சியமைப்பார் என நினைக்கிறீர்கள்?

"நான் செல்லும் பக்கமெல்லாம் திமுகவுக்கு ஆதரவான மனநிலை இருப்பதையே பார்க்கிறேன். ஆனால், மிகப் பெரும்பான்மையாக வெல்ல முடியாது. தொங்கு சட்டசபைகூட அமையலாம்; பாஜக தனது சித்து விளையாட்டுகள் மூலமாக ஜனாதிபதி ஆட்சியைக்கூட அமைக்கலாம்."

அதிமுகவுக்கான வாய்ப்பு..?

"நிச்சயமாக இல்லை, மோடியா? லேடியா? என்று கேட்டு துணிச்சலாக பாஜகவை எதிர்த்து நின்றவர் ஜெயலலிதா. ஆனால், இவர்கள் அதிமுகவையே மோடியிடம் அடகு வைத்துவிட்டார்கள். மக்களுக்கு பாஜக - அதிமுக மீது அதிருப்தி அதிகமாக உள்ளது. அதனால் இவர்களால் நிச்சயமாக வெல்லவே முடியாது. அதிமுக 40 முதல் 50 தொகுதிகளில் வென்றால் பெரிய விஷயம். முக்கியமாக தினகரன் அதிமுகவில் குறிப்பிடத்தக்க வாக்குகளை பிரித்துவிடுவார். அதிமுகவின் தோல்விக்கு அவரும் முக்கிய காரணமாக இருப்பார்.

திடீரென சசிகலாவை சந்தித்தீர்களே... ஏன்? அவர் அரசியலை விட்டு ஒதுங்கியுள்ளாரே?

"அவரும் என்னை சந்திக்க விரும்பினார். நானும் ஜெயலலிதா பிறந்தநாளில் அவரை சந்தித்து வாழ்த்து கூற விரும்பினேன். அதனால்தான் அவரை சந்தித்து பேசினேன். மனம் விட்டு நிறைய விசயங்களை பேசினார். அவர் தற்போது அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பது நல்ல முடிவு, ஆனால், விரைவில் அவர் பொதுச்செயலாளர் வழக்கில் நல்ல தீர்ப்ப்பு வந்தால் மீண்டும் அரசியலுக்கு வருவார்... அதிமுகவை சரிவிலிருந்து மீட்க அவரால்தான் முடியும் என்று நம்புகிறேன்."

இந்தத் தேர்தலில் மாற்று அணியாக போட்டியிடும் தினகரன், சீமான், கமல் பற்றி உங்கள் கருத்து என்ன?

"தினகரன் நல்ல நிர்வாகி. நிச்சயமாக அவர் தமிழக அரசியலில் முக்கிய நபராக இருப்பார். இந்தத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு அமமுக பிரிக்கும் வாக்குகள்தான் முக்கிய காரணமாக இருக்கும். அமமுகவும் சில இடங்களில் வெற்றி பெறும்.

சீமான் மாற்று அரசியல் பேசுகிறார். அது எவ்வளவு எடுபடும் எனத் தெரியவில்லை. கமலோ எம்ஜிஆர் போல ஆகலாம் என நினைக்கிறார். நிச்சயமாக அது முடியாது. என்னை பொறுத்தவரை கமலும் ஊழல்வாதிதான்.” என்றார்.

-வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com