டெல்லி சிறுமி பாலியல் கொலை வழக்கு: உலுக்கும் சம்பவ பின்னணியும்.. அதிர்வலைகளும்

டெல்லி சிறுமி பாலியல் கொலை வழக்கு: உலுக்கும் சம்பவ பின்னணியும்.. அதிர்வலைகளும்
டெல்லி சிறுமி பாலியல் கொலை வழக்கு: உலுக்கும் சம்பவ பின்னணியும்.. அதிர்வலைகளும்

டெல்லியில் 9 வயதான சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரிக்கப்படும் வழக்கு விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெண்கள் - குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத உலகின் நகரங்களின் பட்டியலில் தலைநகர் டெல்லி எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது. நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு முன்பும் பின்பும் இது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இப்போது மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது.

டெல்லியின் நங்கல் கிராமம் என்ற பகுதியில் 9 வயதான சிறுமி ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள மின் மயானத்தில் இருந்து குளிர் நீரை எடுத்து வருவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி திரும்பி வராததால் அவரது தாயார் பதற்றத்துடன் இருந்துள்ளார். அப்போது, மின் மயானத்தில் பணியாற்றும் பூசாரி ராதே ஷ்யாம் மற்றும் அவருடன் இன்னும் இரண்டு, மூன்று பேர் பெண்ணின் தாயாரிடம் வந்து, குளிர்ந்த நீரை பிடிக்கும்பொழுது மின்சாரம் பாய்ந்து சிறுமி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பதறியடித்துக்கொண்டு சிறுமியின் சடலத்தை பார்த்த பெண்ணின் தாயார், சிறுமியின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பதும், உதடு மற்றும் முகத்தின் சில பகுதிகளில் சிராய்ப்பு இருப்பதையும் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளார்.

இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு தான் செல்லவிருப்பதாக சிறுமியின் தாயார் கூற, 'போலீசுக்கு சென்றால் சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும்; அதில் அவரது உடல் உறுப்புகள் திருடப்பட்டு விடும். எனவே இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம்' என கூறியதோடு, அந்தத் தாயின் ஒப்புதல் இல்லாமலேயே சிறுமியின் உடலை மின் மயானத்தில் வைத்து எரித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் மின் மயானத்தில் பூசாரி ராதே ஷ்யாம் மற்றும் குல்தீப், லக்‌ஷ்மி நரைன், சலீம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கொல்லப்பட்ட சிறுமி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டப்பிரிவு மற்றும் கொலை, பாலியல் வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட இந்தியக் குற்றவியல் தண்டனை பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இவ்விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததோடு 48 மணி நேரத்தில் தற்பொழுது வரை எடுக்கப்பட்டுள்ள விசாரணை குறித்து அறிக்கையை வழங்குமாறு டெல்லி காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவை ஒரு புறமிருக்க, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். "பட்டியலின சமுதாயத்தில் இருந்து வந்திருந்தாலும், கொல்லப்பட்ட சிறுமியும் இந்தியாவின் மகள் தான். அவருக்காக நாடாளுமன்றத்தில் நான் நியாயம் கேட்பேன்" என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெண்கள் - குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்வியுடன் பேசுபொருளாகியுள்ளது.

அதேபோல டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நியாயம் கிடைக்க தனது அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று அறிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் காவல்துறை மற்றும் சட்டம் - ஒழுங்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவது என்பதால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தை போலவே டெல்லியின் சட்டம் - ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், ஹத்ராஸ் தொடங்கி 9 வயது சிறுமி கொல்லப்பட்டது வரை இது தொடர்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

நாட்டில் பட்டியலின மக்கள் சந்திக்கக் கூடிய பிரச்னைகள் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் 'பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர ஆசாத், கொல்லப்பட்ட சிறுமியின் உறவினர்களுடன் நங்கல் கிராமத்தில் தொடர் போராட்டத்தை ஈடுபட்டு வருகிறார்.

அரசியல் ரீதியாக மிகப்பெரிய அழுத்தம் இந்த விவகாரத்தில் உருவாகி இருப்பதால், டெல்லி காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் உடல் எரிக்கப்பட்டு விட்டதால், இனி தடயவியல் சோதனை மூலமாக மட்டுமே இந்த வழக்கு நகரவுள்ளது. குறிப்பாக, கைது செய்யப்பட்டு இருப்பவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சேகரிக்கக் கூடிய தடயங்கள் ஆகியவை வழக்கிற்கு அடுத்த நகர்விற்கு வித்திடும் என்பதால், அவற்றை சேகரிக்கும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க, தனது 9 வயது மகளை மிகப் பெரிய கொடூரத்துக்கு பறிகொடுத்த தாய், "எனது மகள் இல்லாமல் இனி நான் எப்படி வாழப் போகிறேன்?!" என கதறியபடி கேட்கும் கேள்விக்கு, இந்தியா என்ன பதில் சொல்லப் போகிறதோ?

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com