’அமைதி’ கார்த்திக் ஆவேசமானது எப்படி? ஓர் ஆச்சர்ய ரிப்போர்ட்!

’அமைதி’ கார்த்திக் ஆவேசமானது எப்படி? ஓர் ஆச்சர்ய ரிப்போர்ட்!

’அமைதி’ கார்த்திக் ஆவேசமானது எப்படி? ஓர் ஆச்சர்ய ரிப்போர்ட்!
Published on

கடந்த 14 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியில், உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்!

திடீரென்று அணிக்குள் சேர்ப்பார்கள், பிறகு கண்டுகொள்ளமாட்டார்கள். ’இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா’ ஸ்டைலில் கண்டுகொள்ளாமல்தான் இருந்தார் தினேஷ் கார்த்திக். அப்படித்தான் இருக்கவும் முடியும். பொங்கி எழுந்து என்ன செய்துவிட முடியும்? ஆனால், இப்போது அவர் தவிர்க்க முடியாத வீரர்! இனி, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவுக்குச் சிக்கல்தான். தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்க்கவில்லை என்றால் எங்கோ ஒரு சந்து பொந்தில் இருந்து கூட உள்ளூர் ரசிகன், ’ஏம்பா?’ என சமூக வலைத்தளங்களில் கேள்விக்கேட்கத் தொடங்குவான்.

2004-ல் அறிமுகம்!
ரஞ்சி போட்டிகளில் கலக்கி வந்த தினேஷ் கார்த்திக்கிற்கு முதன்முதலில் வாய்ப்புக் கிடைத்தது, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில். கங்குலியும், விவிஎஸ். லட்சுமணும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய போட்டி அது. இங்கிலாந்தில் 2004 , செப்டம்பர் 5-ம் தேதி நடந்த இந்த ஒரு நாள் போட்டியில்தான் அறிமுகமானர் தினேஷ் கார்த்திக். இதில் அவர் எடுத்த ரன் 1-தான் என்றாலும் கங்குலியின் 90 ரன்களால் வென்றது அணி. இந்தப் போட்டியில் ஹர்பஜன் வீசிய பந்தில் இங்கிலாந்து கேப்டன் வாகனை ஸ்டம்பிங் செய்து பிரமிக்க வைத்தார் தினேஷ்.

கிடைக்கும் ஆனா கிடைக்காது!

பிறகு அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்த தினேஷ் கார்த்திக், கடந்த 14 வருடங்களில் 79 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1496 ரன்களை குவித்திருக்கிறார். 2004 நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், 23 போட்டிகளில் மட்டுமே விளையாடி ஆயிரம் ரன்கள் எடுத்திருக்கிறார். 

இந்த காலகட்டங்களில் தோனி, நிலையாக இருந்ததால் நிலையில்லாமல் போனார் தினேஷ். ஆனாலும் தோனிக்கு அடுத்த ஆப்ஷனாக இருந்தார். டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்றதும் சாஹா அந்த இடத்துக்கு வந்துவிட, கிடைக்கும் ஆனா கிடைக்காது என்ற நிலை தினேஷூக்கு. வருவதும் போவதுமாக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் அடிக்கடி தன்னை நிரூபித்தே வந்திருக்கிறார் தினேஷ். 

சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணி 6 ஒரு நாள் போட்டியில் விளையாடியும் ஒரு போட்டியில் கூட அவர் களமிறக்கப்படவில்லை. விக்கெட் கீப்பராக இல்லையென்றாலும் பேட்ஸ்மேனாகவாவது இறக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன் அவர் பங்கேற்ற 6 ஒரு நாள் போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள், முறையே 50, 34, 64, 4, 0, 26. 

அபார ஸ்டிரைக் ரேட்!

டி20 போட்டிகளில் அவர் ஆடிய கடந்த 8  போட்டிகளை வைத்துப் பார்த்தால் தினேஷின் ஸ்டிரைக் ரேட் 150-க்கும் மேல். இந்த 8 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே அவர் அவுட் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தச் சூழல்நிலையில்தான் முத்தரப்பு தொடரின் ஃபைனலில் கடுமையான அழுத்தத்துக்கு நடுவே 8 பந்துகளில் 29 ரன்களை விளாசி வெற்றி தேடி தந்திருக்கிறார் தினேஷ் கார்த்திக். இப்போது, தோனியை அடுத்து இவர்தான் சரியான ’பினிஷர்’ என்கிறார்கள். ஒரே போட்டியை வைத்து இப்படி கூறிவிட முடியுமா? எப்போதும் அமைதியாக இருக்கும் தினேஷ் ஆவேசமானது எப்படி?

ஒரே நாளில் நடக்காது!

‘ஒரே ஒரு போட்டியை வைத்து இப்படிச் சொல்லவில்லை. ஆட்டத்தை சரியாக முடிப்பது ஒரே நாளில் நடந்து விடாது. கடந்த கால போட்டிகளின்போது கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் கிடைத்திருப்பது இது. கடந்த வருடம் தினேஷ் பங்கேற்ற போட்டிகளில் அதிக அவுட் ஆனதில்லை. அதில் இருந்தே அவர் மனநிலை எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இனி, அணியில் அவரை உட்கார வைக்க முடியாது’ என்கிறார் முன்னாள் வீரரும் தமிழக கிரிகெட் அணியின் பயிற்சியாளருமான ரிஷிகேஷ் கனிட்கர்.

முன்னாள் கேப்டனும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீகாந்த் கூறும்போது, ’கடுமையான பிரஷருக்கு மத்தியில் தினேஷ் கார்த்திக் ஆடிய விதம் அருமை. அதற்கான தகுதி அவரிடம் இருக்கிறது. அவர் திறமையான வீரர். போட்டியை அருமையாக முடித்து சரியான ஃபினிஷர் என்பதை நிரூபித்திருக்கிறார்’ என்கிறார். இவரை போலவே முன்னாள் வீரர் பிரவின் ஆம்ரேவும் கூறுகிறார்.

’தோனிக்கு மாற்றாக பலரை முயற்சி செய்து பார்த்தோம். அவரைப் போல சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைக்கவில்லை’ என்று முன்பு கூறியிருந்தார், இந்திய கிரிகெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத். இனி, அப்படிச் சொல்ல முடியாது. தோனியின் சாதனை மறக்க முடியாததுதான். ஆனாலும் அந்த இடத்துக்கு அழுத்தமான துண்டை போட்டிருக்கிறார்!
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com