மைனஸ் 50 டிகிரி குளிரும் பறக்காத பறவையும்

மைனஸ் 50 டிகிரி குளிரும் பறக்காத பறவையும்
மைனஸ் 50 டிகிரி குளிரும்  பறக்காத பறவையும்

பறவை இனத்தைச் சார்ந்ததாக இருந்தாலும், இரண்டு இறக்கைகள் இருந்தாலும், பறக்க முடியாத ஒரு பறவை எது என்ற கேள்விக்கு கிடைக்கக்கூடிய பதில் பென்குயின் என்பதாகத்தான் இருக்கும். இது பனி நீரில் நீந்திச் செல்லும்போது மட்டுமே பறப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இதனுடைய உடம்பு கனமாக இருப்பதன் காரணமாகவே இவற்றால் உயர எழும்பி வானில் பறக்க முடிவதில்லை.
சாதாரணமாய் நின்றுகொண்டிருக்கும் ஒரு வளர்ந்த பென்குயின் பறவையை, அதன் பின்பக்கம் இருந்து பார்த்தால் அரிசி மூட்டை ஒன்றை நிறுத்தி வைத்தாற்போல் இருக்கும். ஆனால், பறவைகளிலேயே உச்சபட்ச குளிரையும் தாங்கிக்கொண்டு உயிர் வாழும் தகுதி படைத்த ஒரே பறவை பென்குயின்தான். பனிப்பாறைகளாலும் பனிக்கடல்களாலும் நிரம்பியிருக்கும் அண்டார்டிகாவில் குளிர் என்பது மைனஸ் 50 டிகிரியாக இருக்கும். மனிதர்களால் அந்தக் குளிரைத் தாக்குப்பிடித்து வாழமுடியாது.

ஆனால், பென்குயின் பறவைகள் அந்த குளிரிலும் சந்தோஷமான மூடில் தன்னுடைய குட்டை இறக்கைகளை விசுக் விசுக்கென்று ஆட்டியபடி வாக்கிங் போய்க்கொண்டிருக்கும். அண்டார்டிகாவைத் தவிர ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் கடற்கரைகள்தான் பென்குயின்கள் வாழும் சாம்ராஜ்யங்கள். பென்குயின்கள் ஒற்றுமைக்குப் பெயர் பெற்றவை. தன்னந்தனியாக ஒற்றை பென்குயினைப் பார்ப்பது என்பது அரிதிலும் அரிதான ஒன்று.பென்குயின் வகைப்பாடு ஸ்பெனிஸிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த பென்குயின்களில் பிரதானமாக ஆறு வகைகள் உள்ளன. இவை தங்கள் வாழ்நாளில் பாதியை நிலத்திலும், மீதியைக் கடலிலும் கழிக்கின்றன. பென்குயின் வகைகளிலேயே மிகவும் பெரியது எம்பரர் பென்குயின் ஆகும். இதன் உயரம் 1.1 மீட்டர். எடை 35 கிலோவில் இருந்து 40 கிலோ வரை இருக்கும். இதற்கு அடுத்தபடியாக உள்ளது கிங் பென்குயின், லிட்டில் ப்ளூ பென்குயின், அடிலி பென்குயின், ஆப்பிரிக்கன் பென்குயின், கலாபாகோஸ் பென்குயின், சின்ஸ்ட்ராப் பென்குயின் என்று இதனை ஆறு விதமாகப் பெயர் சொல்லிக் கொண்டே போகலாம் சிறிய நீல நிறமான லிட்டில் ப்ளூ பென்குயினுக்கு ஏஞ்சல் பென்குயின் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதுதான் பென்குயின் இனத்திலேயே மிகச் சிறிய இனமாகக் கருதப்படுகிறது. இது சாதாரணமாக 35 செ,மீ. முதல் 40 செ,மீ. உயரம் கொண்டவையாகவும், சுமார் ஒரு கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும்.

பொதுவாக அளவில் பெரிதாக இருக்கும் பென்குயின்கள் சிறப்பாகத் தன் உடலின் வெப்பத்தை உள்வைத்துக்கொள்ளக் கூடியவையாக இருப்பதால் மைனஸ் டிகிரி கொண்ட குளிர்ப் பகுதிகளில் குளிரைத் தாக்குப்பிடித்து வளரக் கூடியவையாக உள்ளன. அதே சமயம் உயரம் குறைந்த பென்குயின்கள் மிதமான வெப்பநிலை உள்ள பகுதிகளில் வாழும் தன்மை கொண்டவைகளாக உள்ளன. எல்லா பென்குயின் இனத்துக்கும் மேல்புறம் ‘மிட்நைட் ப்ளூ’ எனப்படும் கருப்பு நிறமும், வயிற்றுப்பகுதி வெள்ளை நிறமுமாகவும் இருக்கும். தலை மற்றும் கழுத்தில் உள்ள வித்தியாசமான நிறங்களை வைத்துத்தான் பென்குயின்களை பல்வேறு வகையாக இனம் பிரித்து பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பென்குயின்களின் இறக்கைகள் பறப்பதற்கு பயனற்றவையாக இருந்தாலும், அவை நீரில் நீந்தும்போது துடுப்புகளாக மாறி அற்புதமாக இயங்கவைக்கின்றன. அவற்றின் நீந்தும் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டராக இருப்பது இன்னொரு வியப்புக்குரிய விஷயம். அதுமட்டுமல்லாமல் இறக்கையின் கீழே உள்ள காற்றுப்படலம், அட்லாண்டிக் கடல் குளிரிலிருந்து அதன் உடல் வெப்பத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
உருமறைப்புபென்குயின்களின் உருவ அமைப்பும், அதன் இரு வேறுபட்ட நிறங்களும் அவற்றின் உயிர் காக்கும் கவசங்களாக அமைந்துள்ளன. பனிச் சிறுத்தை, நீர் நாய் போன்ற எதிரிகளிடமிருந்து அவை தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முறை வித்தியாசமாக உள்ளது. அதாவது பென்குயினின் கீழ்ப்பகுதி உடம்பு தூய வெண்ணிறம் கொண்டவை. மேற்புறம் மட்டும் கருப்பு நிறம் காணப்படும். பென்குயின்களைக் கொன்று உணவாக்கிக்கொள்கிற எதிரி விலங்குகள் தூரத்திலிருந்து பார்க்கும்போது பனியின் வெண்மையான நிறத்தோடு பென்குயின்களின் அடிப்புற உடம்பின் வெண்மை நிறமும் ஒன்றோடு ஒன்று கலந்து விடுவதால் பென்குயின்கள் இருப்பது அந்த எதிரி விலங்குகளுக்குத் தெரியாத அளவுக்கு உருமறைப்பு செய்துவிடும்.

பென்குயின்கள் அதிக ஆழத்தில் நீந்துவது இல்லை. பெரும்பாலும் நீர்மட்டத்துக்கு மேலே, அதற்குத் தேவையான மீன்கள் உணவாகக் கிடைத்துவிடுகின்றன. ஏதாவது ஒரு காரணத்தால் நீரின் மேல் மட்டத்தில் போதுமான மீன்கள் கிடைக்காதபோது மட்டும்தான் பனிக்கடலின் ஆழமான பகுதிக்குள் சென்று, சில நிமிடங்கள் மட்டுமே நீந்தி, மீன்களைக் கவ்விக்கொண்டு நீர்ப்பரப்புக்கு மேலே வந்துவிடும். பொதுவாக பென்குயின்கள் 250 மீட்டர் ஆழம் வரை சென்று 10 முதல் 20 நிமிடங்கள் வரை மூச்சைப் பிடித்து நீந்தி விட்டு மேலே வந்துவிடும். நீரில் காட்டும் வேகத்தை பென்குயின்களால் நிலத்தில் காட்டமுடியாது. நிலத்தில் தன்னுடைய கனமான உடம்பைத் தூக்கிக் கொண்டு, இறக்கைகளை அசைத்தபடி, கால்களை அகட்டி அகட்டி வைத்து நடக்கும். நடக்கமுடியாதபோது அவற்றின் வயிற்றைப் பனிக்கட்டி மீது வைத்து, போகவேண்டிய இடத்திற்கு வழுக்கிக்கொண்டு போய்விடும்.

பெரும்பாலான பென்குயின்கள் நடக்க விருப்பப்படாமல் வழுக்கிக்கொண்டு போகவே விருப்பப்படும். காரணம், தன் உடம்பில் உள்ள வெப்ப கலோரி சக்தியைச் சேமிப்பதற்காகவும் அதேவேளையில் வேகமாய் செல்வதற்காகவும் தன்னுடைய கோள வடிவ வயிற்றை வைத்து வழுக்கிச் செல்கின்றன. பென்குயின்களின் இந்த செயல்பாட்டை டொபோகனிங் (கூOஆOஎஎஅNஐNஎ) என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். பென்குயின்களின் பார்வையைவிட செவிப் புலன் சிறப்பானது. இதன் உடல் முழுவதும் தண்ணீர் உள்ளே புகாத அளவுக்கு, மூன்று அடுக்குச் சிறகுகள் உள்ளன. இந்த சிறகுகள் வாட்டர் புரூப் போல் செயல்பட்டு தண்ணீர் உள்ளே போவதைத் தடுத்துவிடுகிறது. கடும் குளிரும் தாக்காதபடி பார்த்துக் கொள்கிறது. பனி மழை பெய்தாலும் உடம்பு நனைவது இல்லை.

பென்குயினின் உடம்பிலுள்ள சிறகுகளின் எடை மட்டும் 2 கிலோ என்ற அளவில் இருக்கும். இதன் உடம்பிலிருந்து நாள்தோறும் 100 முதல் 150 கிராம் எடை கொண்ட சிறகுகள் உதிர்ந்துவிடுகின்றன. ஆனால் அடுத்த இரண்டு வார காலத்திற்குள் அதன் உடம்பில் புது சிறகுகள் முளைத்துவிடுகின்றன. பென்குயின்கள் பெரும்பாலான நேரம் நீரிலேயே இருப்பதால் அவற்றின் உடம்பு எப்போதும் பளிச்சென்ற தோற்றத்தோடு காணப்படும். ஒருவனுக்கு ஒருத்தி ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த கோட்பாடு மனிதர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ பென்குயினுக்கு உண்டு. ஒரு ஆண் பென்குயின், ஒரு பெண் பென்குயினைத் தனது இணையாகத் தேர்ந்தெடுத்துவிட்டால், அதற்குப் பிறகு தனது காதல் மனைவியை தவிர வேறொரு பெண் பென்குயினை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இணை சேர்வதற்கு என்று குறிப்பிட்ட மாதங்கள் இல்லை. எல்லாப் பருவங்களிலும் இணை சேர்கின்றன. சேர்க்கை முடியும்வரை ட்ரம்பெட் போன்ற இசையை ஆண், பெண் இரண்டுமே எழுப்பிக் கொண்டிருக்கும்.

வயிற்றில் முட்டை உருவானதும் அதைப் பாதுகாப்பான இடத்தில் இடுவதற்காக, கடற்கரையில் தகுந்த இடத்தை பெண் பென்குயின் தேர்ந்தெடுக்கும். பொதுவாக இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். முட்டைகள் லேசான பச்சை நிறத்துடன் காணப்படும். பெண் பறவை இரை தேடச் செல்லும்போது ஆண் பறவை முட்டைகளைப் பாதுகாக்கவும் செய்யும். சில நேரங்களில் பெண் பறவைகள் உணவுக்காக நெடுந்தூரம் செல்வதால் திரும்பிவர இரண்டு நாட்கள் ஆவதும் உண்டு. அது வரைக்கும் ஆண் பென்குயின் முட்டைகளை அடைகாத்தபடியே இருக்கும். தரையில் மார்பிள் போட்டது போல் பள பளப்பாக இருக்கும் அண்டார்டிக் பிரதேசத்தில் வாழும் பெண் பென்குயின், தன்னுடைய முட்டைகளை அடைகாக்க சரியான இடம் இல்லாத காரணத்தால் தனது பாதங்களுக்கு இடையில், பாதுகாப்பாக வைத்துக்கொண்டு ஒரே இடத்தில் அமர்ந்து இருக்கும். பாத சவ்வுகளுக்கு இடையே இருக்கும் வெப்பம் முட்டையை குஞ்சு பொரிக்கக்கூடிய அளவுக்கு இருக்கும். முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்ததும் பெற்றோரைப் பார்த்து குரல் கொடுக்கும்.

அதன் பிறகு குஞ்சுகள் ஓரளவு வளர்ந்ததும், அவற்றை வயதில் மூத்த பென்குயின்களிடம் ஒப்படைத்து விட்டு மீன், இறால் வேட்டைக்கு கிளம்பிவிடும். உலகத்திலேயே ஆஸ்திரேலியாவில்தான் பென்குயின்களின் எண்ணிக்கை அதிகம். கடற்கரையில் கூட்டம் கூட்டமாய்த் திரியும் பென்குயின்களைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள். சந்தோஷமான மூடில் இருக்கும் போது பென்குயின்கள் கர்ணம் அடிக்கும். வேடிக்கையாய் நடந்து காட்டும். பனிப்பிரதேசத்தில் வாழும் சீல்கள் உணவுக்காக பென்குயின்களை வேட்டையாடுவதால், பென்குயின்கள் பாதுகாப்புக் காரணமாகக் கூட்டம் கூட்டமாகத் திரியும் இயல்பு கொண்டவையாக இருக்கின்றன.

பென்குயின்களிடம் காணப்படும் இன்னொரு வியப்பான விஷயம் என்ன வென்றால், இவை நன்னீரை குடிப்பதில்லை. அதேபோல் நன்னீரிலும் வாழாது. கடல் நீரை மட்டுமே குடிக்கும். கடல் நீரில் உள்ள எல்லா வகை உப்புகளையும் பிரித்து வெளியேற்றுவதற்காக இதன் உடம்பில் ஒரு சுரப்பி உள்ளது. அந்த சுரப்பிக்கு சுப்ரா ஆர்பிடல் கிளான்ட் (குக்ககீஅOகீஆஐகூஅஃ எஃஅNஈ) என்று பெயர். சில ஆண்டுகளுக்கு முன் அழியும் நிலையில் இருந்த பென்குயின்கள், உலக பறவை ஆர்வலர்களின் முயற்சி காரணமாக இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றைய புள்ளி விவரப்படி அண்டார்டிக் அருகில் உள்ள தீவுகளில் 2.5 மில்லியன் அளவுக்கு பென்குயின்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மைனஸ் 50 டிகிரி குளிரில் ஒரு மனிதன் உயிர்வாழ முடியாது. ஆனால் ஒரு பறவை கூட்டம் கூட்டமாய் வாழ்கிறது. இயற்கையை ‘வாவ்’ என்று சொல்லி வியக்காமல் இருக்க முடியவில்லை. அடுத்தமுறை நீங்கள் எங்கேயாவது பென்குயினைப் பார்க்க நேர்ந்தால் சிரமம் பார்க்காமல் ஒரு ‘சல்யூட்’ வையுங்கள்.

- ராஜேஷ் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com