“அண்ணாமலைக்கு பாஜகவில் தலைவர் பதவி கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை“ : சசிகாந்த் செந்தில் பேட்டி

“அண்ணாமலைக்கு பாஜகவில் தலைவர் பதவி கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை“ : சசிகாந்த் செந்தில் பேட்டி
“அண்ணாமலைக்கு பாஜகவில் தலைவர் பதவி கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை“ : சசிகாந்த் செந்தில் பேட்டி

இந்தி திணிப்பு, குலக்கல்வியின் நவீன வடிவமான புதியக்கல்விக் கொள்கை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமைச் சட்டம், ஏழை மாணவர்களின் மருத்துவக்கனவை பொசுக்கும் நீட் என பாஜக அரசின்  மக்கள்விரோத திட்டங்களை விமர்சித்து, கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ். 

 "ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்துகொள்ளப்படும்போது, அரசு ஊழியராகப் பணி புரிவது தர்மமற்றது” என்று துணிச்சலுடன் விமர்சித்து ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில், இந்திய ஆட்சிப் பணியில் நேர்மையான அதிகாரி என்று மக்களால் பாராட்டப்பட்டவர். தற்போது, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவரிடம், பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்...

அம்பேத்கரிய, இடதுசாரியக் கொள்கைகளைப் பேசும் நீங்கள், அந்தக் கட்சிகளில் சேராமல் காங்கிரஸில் இணைந்தது ஏன்?

பாஜகவுடன் எப்போதும் சமரசம் செய்துகொள்ளாத தேசிய அளவிலான கட்சி காங்கிரஸ்தான். மக்கள் மீது பாஜக நடத்திக்கொண்டிருக்கும் பாசிசத் தாக்குதல் பிடிக்காமல்தான் பணியை ராஜினாமா செய்தேன். அரசு அடித்தால் மக்கள் போராட்டம் செய்வார்கள். ஆனால், பாஜக ஆட்சியில் மக்களே அடித்துக்கொள்கிறார்கள். இதுபோன்ற வெறுப்பரசியலுக்கு அரசியல் வழியாகவே தீர்வுகாண முடியும் என்று நினைத்ததால் காங்கிரஸில் இணைந்தேன். அதனால்தான், மற்றக் கட்சிகளில் சேரவில்லை. மேலும், மக்கள் இயக்கங்களிலிருந்து வந்ததால், அதற்கான சுதந்திரமும் காங்கிரஸ் கட்சியில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பாஜக ஒரு வெறுப்பரசியல் கட்சி என்கிறீர்கள். ஆனால், அந்தக் கட்சியைத்தானே மக்கள் தொடர்ந்து வாக்களித்து ஆட்சியிலும் அமர வைத்துள்ளார்கள்?

பாஜகவை ஒரு கட்சியாக பார்க்கவில்லை. அதனை ஒரு அமைப்பாகவே பார்க்கிறேன். ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் வேலையே மக்களிடம் மூளைச்சலவை செய்வதுதான். அதற்காக, பெரிய கட்டமைப்பையே வைத்துள்ளார்கள். நாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். வெகுஜன மக்கள் விரும்புவதுதான் ஜனநாயகம் என்றால், இது ஒரு மோசமான பார்வை.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு பாஜக கொடுத்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சியும் ஆதரித்து இரண்டு கட்சிகளுக்குமே கொள்கை அளவில் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்று காட்டியது. அப்படி இருக்கும்போது, காங்கிரஸின் எந்தக் கொள்கைகள் உங்களை ஈர்த்தது?

பாஜக 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததை காங்கிரஸ் ஆதரித்ததில் நான் முரண்படுகிறேன். அதேசமயம், கொள்கைகளில் இரண்டு கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன. ஒரு சமூகத்தின் மீது கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி பெரும்பான்மையான சமூக மக்களிடம் ஓட்டுகளை வாங்கிக்கொள்வது பாஜகவின் உத்தி. அதுவே, பொருளாதார வளர்ச்சிக்காகவும் வேலைவாய்ப்பிற்காகவும் என்ன செய்துள்ளார்கள் என்று பார்த்தால், ஒன்றுமே இருக்காது.

ஆனால், காங்கிரஸ் கட்சியில் அப்படி இல்லை. ஒரு சுதந்திர இயக்கமாக இருந்து கட்சியாக மாறியது. பன்முகத்தன்மை, ஜனநாயகம், சகோதரத்துவம் ஆகியவற்றைக் கொள்கைகளாகக் கொண்ட கட்சி. அன்பையும் மனிதத்தையும் விரும்புபவர்களுக்கு எப்படி காங்கிரஸை பிடிக்காமல் போகும்?

ஆனால், காங்கிரஸுக்கு ஒரு தலைவரையே தேர்வு செய்ய முடியாத நிலைமையில் மக்களுக்கு என்ன நன்மை செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?

ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்றுக் கொண்டு விலகிவிட்டார். இப்போது, சோனியா காந்தி இடைக்கால தலைவராக உள்ளார். தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகியதையே நான் பெரிய நல்ல விஷயமாகப் பார்க்கிறேன். பொறுப்பேற்றுக்கொண்டு விலகும் குணம் மற்றக் கட்சியினருக்கு வருமா என்பது தெரியாது. ராகுல் காந்தி நல்ல மனிதர். நாட்டின் பன்முகத்தன்மையை மதிக்கும் தலைவர். முற்போக்கானவர். எந்த விஷயத்தையும் தொலைநோக்கு சிந்தனையுடன் அணுகுபவர். கூடிய விரைவில் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன்.

ஒரே மாநிலத்தில் பணிபுரிந்த நீங்களும் முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலையும் ஒரே காலக்கட்டத்தில் ராஜினாமா செய்தவர்கள். அவர், சரியான கட்சி என்றுக்கூறி பாஜகவில் இணைந்திருக்கிறார். நீங்கள் மோசமான கட்சி என்கிறீர்களே? யார் சொல்வது உண்மை?

உண்மையை பார்க்கவேண்டாம். எந்தக் கட்சி நல்லக் கட்சி என்பதை பாருங்கள். அன்பை வளருங்கள் என்கிறது காங்கிரஸ். வேலையும் சூலையும் எடுங்கள் என்கிறது பாஜக. எது வேண்டும் என்று சமூகம் முடிவு செய்யட்டும்.

அரசியலுக்கு வரும் எண்ணத்தில்தான் அண்ணாமலை ராஜினாமா செய்தார். முன்கூட்டியே உங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்ததா?

அப்படி எந்த எண்ணமும் இருந்ததில்லை. எனது குடும்பத்தினர்கூட எந்தக் கட்சியிலும் இல்லை. ஆரம்பத்தில், அரசியல் கட்சிகள் மீது ஒரு வெறுப்பு இருந்ததால்தான், மக்கள் இயக்கங்களில் இணைந்துகொண்டேன். இந்த இயக்கங்களை அப்படியே விட்டால் பாஜக அனைவரையும் அடித்து சாய்த்துவிடும் என்ற புரிதலே அரசியலுக்கு வரவைத்தது.

அண்ணாமலை பாஜகவில் இணைந்தவுடன் துணைத் தலைவர் ஆகியுள்ளாரே? உங்களுக்கு இன்னும் எந்தப் பொறுப்பும் கொடுக்கவில்லையே?

நான் காங்கிரஸ் கட்சியில் சேரும்போது எந்தவொரு டிமாண்டையும் வைக்கவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லை. தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. நீண்ட நாட்களாக கட்சிக்காக உழைத்தவர்கள்தான் மேலே செல்லவேண்டும். கட்சியின் வளர்ச்சிக்காக பணிபுரிந்து மதவாத சக்திகளை வளரவிடாமல் வலுவாக எதிர்க்கவேண்டும் என்பதே என் நோக்கம். பாஜக என்பது தமிழகத்தில் இல்லாத ஒரு கட்சி. யார் போய் சேர்ந்தாலும் பொறுப்பு கொடுத்து விடுவார்கள். அதனால், தலைவர் பதவிக்கூட கொடுப்பார்கள். அதில், ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

ஆனால், பீகார் தேர்தலில் சிறுபான்மையினர் கட்சிகளையும் பட்டியலின மக்களுக்கான கட்சிகளையும் காங்கிரஸ் ஒதுக்கி வைத்து தேர்தலை சந்தித்ததே?

இதனை நான் பெரிய தவறாக பார்க்கிறேன். பீகார் தேர்தலில் ஏதாவது ஒரு சமாதானம் செய்து அனைவரையும் ஒன்று திரட்டி போட்டியிட்டிருக்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.  எங்கோ தவறு நடந்திருக்கிறது. சிறியக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் ஒரு பரந்த மனப்பான்மை காங்கிரஸ் கட்சிக்கு வரவேண்டும்.

’பட்டியலின மக்களுக்கு காங்கிரஸ் எதிரான கட்சி’ என்றிருக்கிறாரே அம்பேத்கர்? நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஒரு காலத்தில் அப்படி இருந்ததால், பாபாசாகேப்  அப்படி சொன்னார். ஆனால், இந்தக் காலக்கட்டத்தில் அதுபோன்று அதிகம் இல்லை. அடுத்தடுத்து வந்த காங்கிரஸ் தலைமைகள் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். ராகுல் காந்தி சமூக நீதி கொள்கையில் இன்னும் உறுதியானவராக இருக்கிறார். அதனால், காங்கிரஸ் கட்சி பட்டியலின மக்களுக்கு எதிரானது என்று நான் பார்க்கவில்லை.

தமிழக காங்கிரஸ் மூழ்கப்போகும் கப்பல் என்கிறார்களே? எதிர்காலம் எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?

என்னுடைய கணிப்பு வரும் காலத்தில் பாஜக தமிழகத்தில் இரண்டாவது கட்சியாக நிலைநிறுத்திக்கொள்ளும். இப்போதெல்லாம், அதிமுக குறித்து யாரும் பேசுவதில்லை. முன்பு ஜெயலலிதா, கலைஞருக்குதான் அறிக்கைப்போர் நடக்கும். ஆனால், இப்போது அதிமுக எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைமைபோல், பாஜக கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் அதிமுகவை அழித்துவிடும். அவர்களுக்கு ஆட்சி என்பது இரண்டாம் பட்சம்தான். இந்த நாட்டின் சிந்தனையை ஒருமைப்படுத்தவேண்டும் என்பதே நோக்கம். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இன்னும் பொறுப்புகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

உங்களைப்போலவே ராஜினாமா செய்த மற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் காங்கிரஸில் சேர்ந்தது குறித்து என்ன சொன்னார்கள்?

எல்லோருமே இதனை வரவேற்றார்கள். இப்படி செய்திருக்கலாம் ,அப்படி செய்திருக்கலாம் என்பதை விட இறங்கி வேலை செய்தால்தான் தீர்வு கிடைக்கும். தனிமனிதனாக இந்த முடிவை எடுக்கவில்லை. அவர்கள் எல்லோரின் முடிவாகத்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளேன்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com