கர்ப்பிணிகளை எளிதில் தாக்கும் கொரோனா.. செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..

கர்ப்பிணிகளை எளிதில் தாக்கும் கொரோனா.. செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..
கர்ப்பிணிகளை எளிதில் தாக்கும் கொரோனா.. செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..

கர்ப்பிணி பெண்களை கொரோனா அதிகளவு பாதித்து வருகிறது. பிரசவத்திற்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களை பரிசோதனை செய்யும்போது பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவருகிறது. பெண்களுக்கு பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக  இருந்தாலும், பிரசவ காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றம் ஏற்படும். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

இதனால், கொரோனா தொற்று எளிதில் பரவும். கர்ப்பமாக இருக்கும் காலத்தில், பெண்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய பிரச்னைகள் உள்ளிட்டவை அதிகமாக ஏற்படும். எனவே அவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

கொரோனாவிடமிருந்து தப்பிக்க கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை என்ன? செய்யக் கூடாதவை என்ன? என்பது குறித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் மகப்பேறு மருத்துவருமான அனு ரத்னாவிடம் கேட்டோம்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: கருவுற்ற பிறகு பெண்ணின் உடலில் நிறைய வளர்சிதை மாற்றங்கள், உடல்செயலியல் மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையானதாக இருந்தாலும் கர்ப்பம் தரித்த பெண்கள் நோய்த்தொற்றை எளிதில் பெறவும் ஒரு காரணமாக உள்ளது. கருவுற்றபின் கர்ப்பப் பையானது விரிவடைய தொடங்கும்.

விரிவடைவதற்கு தகுந்த அளவு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கர்ப்பப்பைக்கான ரத்த ஓட்டம் அதிகரிக்க வேண்டி ரத்த நாளங்கள் விரிவடைந்து ரத்த தேக்கிகளாக (sinuses)மாறும். ரத்த ஓட்டத்தில் கலக்கும் கொரோனா வைரஸ் இதனால் வலுப்பெறும். காரணம் வைரஸ் உடலுக்குள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்லவும், இனப்பெருக்கம் செய்யவும் இத்தகைய ரத்த நாள மாற்றங்கள் உதவும்.

கருவுறுதலில் நடக்கும் மிக முக்கியமான ஒரு மாற்றம் என்பது ரத்த அளவு அதிகரித்தல். 30% ரத்தமும், 50% பிளாஸ்மாவும் கர்ப்பத்தில் அதிகரிக்கும். இது உடல்செயலியல் மாற்றம். இயற்கையாக நடக்கும் மாற்றம் இது. ரத்த அளவு அதிகரிக்கும் அளவு இல்லாமல் அதைவிட குறைவான அளவு ரத்த அணுக்கள் அதிகரிக்கும். ரத்த அணுக்கள் 20%தான் அதிகரிக்கும். இதனால் ரத்தம் நீர்த்தல் (Hemodilution) நடைபெறுகிறது. கர்ப்பத்தின்போது கர்ப்பப்பை விரிவடைதல், குழந்தைக்கு தேவையான பாதுகாப்பு தருதல், பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்டுதல் போன்ற காரணங்களுக்காகத்தான் கருவுற்றபின் ரத்த அளவு அதிகரிக்கிறது. இது வைரஸ் போன்ற கிருமிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது. கொரோனா வைரஸாக இருந்தாலும் ரத்தத்தில் கலக்கும் எவ்வித கிருமியாக இருந்தாலும் அது ரத்த சிவப்பணுக்களை தான் நாடி பெரும்பாலும் போகும். ரத்த சிவப்பணுக்களின் மேல் படர்ந்தே அது உடலின் இதர பாகங்களுக்கு பயணம் செய்கிறது. அதாவது கடல்நீரில் நாம் கப்பலில் பயணிப்பதுபோல் வைரஸானது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் மேல் அமர்ந்து பயணிக்கிறது.

கருவுற்று இருக்கும் போது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கும். ஆகையால் வைரஸ்கள் பயணிக்க எளிதாகிறது. உடலில் எவ்வித நோய்த்தொற்று ஏற்பட்டாலும் நம் உடலில் வெள்ளையணுக்கள் அதிகரிக்கும். ஆனால் எவ்வித நோய்த்தொற்றும் இல்லாமலேயே கருவுற்றவுடனேயே வெள்ளையணுக்கள் அதிகரிக்கும். இவை அனைத்துமே கிருமியின் பயணத்திற்கும் இனப்பெருக்கத்திற்கும் உதவும். கொரோனாவில் இறப்பு ஏற்படுவதன் முக்கியக் காரணம் ரத்த நாளங்களில் அடைப்புகளை ஏற்படுத்துவது தான் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்த அடைப்புகள் ரத்த ஓட்டத்தை தடை செய்யும். கருவுற்ற காலங்களில் இயல்பாகவே ரத்தமானது அதிஉறைதல் தன்மை உடையது. ரத்தக் கசிவு நேரம், ரத்தம் உறைதல் நேரம் மாற்றம் இல்லாமல் கருவுற்றலுக்கு முன்பு இருந்த நிலையில் இருந்தாலும் ரத்த தட்டுகள் அதிகரித்தல், 1, 2, 5, 7, 8, 10, 12 போன்ற ரத்த காரணிகள் அதிகரிப்பதால் ரத்தம் அதிஉறைதல் (Hyoercoagulability) நிலையை அடைகிறது. இப்படி அதிஉறைதல் நிலையில் ரத்தம் இருக்கும்போது ரத்த அடைப்பை உருவாகும் வைரஸ்கள் இணைந்தால் ரத்த நாள
அடைப்பு தவிர்க்க முடியாததாகிறது.

கொழுப்பு புரதம் போன்ற சத்துக்களின் தேவையும் கருவுற்ற காலங்களில் அதிகம் தேவைப்படுகிறது. இரும்புச்சத்தும் கருவுற்ற காலங்களில் அதிகம் தேவை. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய நுண் சத்துக்களின் அளவும் கருவுற்ற காலங்களில் இயல்பாகவே அதிகம் தேவைப்படும். அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின் C) நல்ல நோய் எதிர்ப்பாற்றலைத் தரும். ஆனால் கருவுற்று இருக்கும்போது உடலில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் குறையும். இப்படி இரும்புச் சத்து, நுண்சத்துகள், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை கருவுற்றகாலத்தில் குறைவதால் நோய்த்தொற்று எளிதாகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:-

1) கருவுற்று இருக்கும் போது அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளவும்.
2) மருத்துவ பரிசோதனை தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை அல்லது ஒரு பாதுகாப்பான சூழலை விட்டு வெளியே வரவேண்டாம்.
3) உடலை தூய்மையாக வைத்துக்கொள்ளவும்.
4) நகங்கள் வளர்க்க கூடாது, கைகளை முறையாக சோப்பு போட்டு கழுவவும்.
5) வீட்டில் இருந்தாலும் தனிமனித உடல் இடைவெளியை கடைபிடிக்கவும்.
6) காய்கறிகள் பழங்கள் போன்ற நுண்சத்துக்கள் மிகுந்த உணவுகளை உண்ணவும்.
7) புரதச்சத்து மிக முக்கியம். புரதச்சத்து மிகுந்த உணவுகளை பால் வெண்ணெய் முட்டை இறைச்சி போன்றவற்றை உண்ணவும்.
8) மருத்துவர் பரிந்துரையின்றி எவ்வித மருந்தும் தாமாக உட்கொள்ள கூடாது.

சிகிச்சை :-

1) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடன் சுகாதார செவிலியர் அல்லது அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நாடவும்.
2)மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர வேண்டும்.
3) நோய் அறிகுறிகளுக்கு தகுந்தவாறு சிகிச்சை அளிக்கப்படும். கர்ப்பப்பையில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் பிறருக்கு கொடுக்கும் அனைத்து மருந்தும் கருவுற்ற தாய்க்கு கொடுக்க இயலாது. சிகிச்சை மாறுபடும். நோய் அறிகுறிகளுக்கு தகுந்தவாறு பிராணவாயு சிகிச்சை மற்றும் இதர சிகிச்சைகள் அளிக்கப்படும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com