நீலகிரி: வனத்துறையினர் பிடித்து சென்ற தாய்க்கரடியை தேடி தினமும் ஊருக்குள் வரும் குட்டிகள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த தாய் கரடியொன்று, கடந்த 3 ம் தேதி வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. அப்போது அதனுடன் இருந்த மூன்று சின்ன கரடிகள் தப்பித்திருந்தன. அவையாவும் தற்போது பத்து நாட்களுக்குப் பின் தாயைத் தேடி மீண்டும் கிராமத்திற்குள் தினமும் வருகின்றன. இது அங்கிருக்கும் பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன், கேர்கம்பை, இந்திரா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களில் கரடிகள் உலாவரும் பிரச்னை இருந்தது. அதை சரிசெய்ய எண்ணி, ஊருக்குள் ஆங்காங்கே வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். அப்படி கிராமத்தின் நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு கூண்டில் கடந்த 3ம் தேதி தாய் கரடி சிக்கியது. சிக்கிய அந்தக் கரடியை, கோரகுந்தாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் கொண்டு விட்டனர்.
தற்போது தாயை தேடி வரும் குட்டி கரடிகள் மூன்றும் மிகவும் சோர்வுற்று காணப்படுவதால், அனைத்தையும் பாதுகாப்பாக தாய்கரடியை விட்ட அதே கோரகுந்தா வனப்பகுதியில் விடவேண்டும் என்று மிளிதேன் கிராமமக்கள் வனத்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.