பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையை மறித்து நின்ற காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிப்பு
பண்ணாரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் வாகனங்களை வழிமறித்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியதோடு சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றன. இதன் காரணமாக சாலையில் சென்ற சரக்கு லாரிகள் யானைக் கூட்டத்தை கடந்து செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் அரை மணிநேரம் காட்டுயானைகள் சாலையில் நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
பின்னர் காட்டு யானை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து வாகனங்கள் புறப்பட்டு சென்றதால் போக்குவரத்து சீரானது. காட்டு யானை கூட்டம் வாகனங்களை வழிமறித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், காட்டு யானைகள் சாலையில் நடமாடினால் அதிக சப்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களை ஒலிக்க வேண்டாம் என வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர்.