கானகத்தை காவல்காக்கும் பேருயிர்கள் - இன்று சர்வதேச யானைகள் தினம்

கானகத்தை காவல்காக்கும் பேருயிர்கள் - இன்று சர்வதேச யானைகள் தினம்
கானகத்தை காவல்காக்கும் பேருயிர்கள் - இன்று சர்வதேச யானைகள் தினம்
கானகத்தின் பேருயிர்களான யானைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் விதமாக இன்று, உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நிலத்தில் வாழும் உயரினங்களில் பேருயிராக இருப்பவை யானைகள் மட்டுமே. காடுகள் செழிக்கக் காரணமும் யானைகள் தான். கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வனங்களை செழுமைப்படுத்திய யானைகள் இன்று பெரும் துயரில் சிக்கி தவிக்கின்றன. மனிதர்கள் வேட்டை சமூகமாக வாழ்ந்த போது யானைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் நாகரீகம் தோன்றிய பிறகு பல்வேறு காரணங்களால் யானைகள் வேட்டையாடப்படுகின்றன.
இந்நிலையில் கோவை மாவட்ட வனத்துறை மக்களுக்கு யானைகள் குறித்த புரிதலையும் அதன் தொன்மையினையும் விளக்கும் வகையில் மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கு வளாகத்தில் வேழம் இயலியல் பூங்காவை உருவாக்கியுள்ளது. இதனுள் சென்றால் திரும்பும் பக்கமெல்லாம் யானைகள் குறித்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இப்பூங்கா இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
பொதுவாக வளர்ப்பு யானைகள் முகாம் என்றாலே, யானைகளை கொடுமைப்படுத்தும் இடமாக கருதப்படும் சூழலில், அதை பொய்யாக்கும் வகையில் இருக்கிறது மக்னா யானை மூர்த்தியின் வாழ்க்கை முறை. 1990களில் 22 பேரை கொன்ற மூர்த்தி சர்வதேச அளவில் கவனம் பெற்ற யானை. மிகவும் மூர்க்கமாக இருந்த மூர்த்தியை பிடிக்கும் முயற்சியின் போது அதற்கு காயங்கள் ஏற்பட்டது. யானையை வனத்துறையினர் கொடுமைப்படுத்துவதாக சர்வதேச அளவில் குரல்கள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து வனத்துறையினரின் முயற்சியால் மூர்த்தி வளர்ப்பு யானையாக மாற்றப்பட்டு, தற்போது முகாமில் காட்டு யானையைப் போல் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறது.
வனப்பகுதியில் சுதந்திரமாக வாழும் மூர்த்தி போன்ற யானைகளை பிடித்து வளர்ப்பு யானையாக மாற்றுவதற்கு பதிலாக அறிவியல் ரீதியிலான மாற்று முயற்சிகளை வனத்துறை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் உலக யானைகள் தினத்தின் வாயிலாக வைக்கப்படும் கோரிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com