\
Nebula
NebulaReuters

இது அழிவா.. அழகா? சாகும் நட்சத்திரத்தின் கடைசி கையொப்பம்.. பிரமிக்கவைக்கும் மிரட்டலான காட்சி!

ஒரு நட்சத்திரம் தன் கடைசி மூச்சை சுவாசித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நட்சத்திரத்தின் அழிவு இத்தனை பிரமிக்கவைக்கும் காட்சியைத் தருமா? அந்த வியப்பில்தான் தற்போது ஒட்டுமொத்த விண்வெளி ஆர்வலர்களும் உள்ளனர்.
Published on

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி, பூமியில் இருந்து வெகுதொலைவில் உள்ள ‘லயன் நெபுலா’வின் இதுவரை இல்லாத அளவுக்கு தெளிவான படத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தப் படம், தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள ஒரு நட்சத்திரத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களை வானியலாளர்களுக்கு வழங்கியுள்ளது.

அதிக நிறைகொண்ட நட்சத்திரங்கள் தங்கள் வாழ்வின் இறுதியில் சக்திவாய்ந்த சூப்பர்நோவா வெடிப்பில் அழிகின்றன. ஆனால், லயன் நெபுலாவின் மையத்தில் உள்ளதைப் போன்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நட்சத்திரங்கள் ஒப்பீட்டளவில் அமைதியான முறையில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றன.

Nebula
NebulaReuters

இந்த நட்சத்திரம் வயதாகத் தொடங்கியபோது, அதன் வெளிப்புற அடுக்குகளை படிப்படியாக விண்வெளிக்குள் வெளியேற்றியது. இதன்மூலம் உருவான மிகப்பெரிய அளவிலான தூசி மற்றும் வாயு மேகங்கள், நட்சத்திரத்தின் மையப்பகுதியைச் சுற்றி வண்ணமயமான ஒளிரும் அடுக்குகளாக உருவெடுத்தன.

மையத்தில் எஞ்சியுள்ள சூடான நட்சத்திர மையத்திலிருந்து வெளிப்படும் வெப்பம், இந்த வாயு மேகங்களை ஒளிரச் செய்வதால், ஜேம்ஸ் வெப் படங்களில் இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறங்களில் பிரமிக்க வைக்கும் தோற்றம் கிடைத்துள்ளது.

Nebula
NebulaReuters

இந்தக் காட்சி நிரந்தரமானது அல்ல. விரிவடைந்து வரும் தூசி மற்றும் வாயு மேகங்கள் மையப்பகுதியிலிருந்து விலகி ஆழமான விண்வெளிக்குச் சென்று, சுமார் 10,000 ஆண்டுகளில் முழுமையாகக் கலைந்து மறைந்துவிடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்தப் படத்தைப் பகிர்ந்த நாசா, இதை “நட்சத்திர வாழ்க்கையின் சுழற்சி” எனக் குறிப்பிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com