‘நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக குறைக்க முடிவு’-கிளாஸ்கோ மாநாட்டின் தீர்மானம் சொல்வதென்ன?

‘நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக குறைக்க முடிவு’-கிளாஸ்கோ மாநாட்டின் தீர்மானம் சொல்வதென்ன?
‘நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக குறைக்க முடிவு’-கிளாஸ்கோ மாநாட்டின் தீர்மானம் சொல்வதென்ன?

நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக குறைப்பது தொடர்பாக கிளாஸ்கோ மாநாட்டில் உலக நாடுகளால் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் சி.ஓ.பி 26 என்ற பெயரில் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாநாடு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் மனித சமூகத்திற்கும், உலகின் சமநிலைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கியமான தலைப்புகளில் மிக விரிவான விவாதங்கள் உலகத் தலைவர்களால் முன் வைக்கப்பட்டது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி தொடங்கி சிறிய சிறிய நாடுகள் வரை தங்களது தரப்பு கருத்துக்களையும் யோசனைகளையும் இந்த மாநாட்டில் முன்வைத்தனர்.

இது தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தாலும், மிக முக்கியமாக நிலக்கரி பயன்பாட்டை படிபடியாக முடிவிற்கு கொண்டு வருவது தொடர்பாக எடுக்கப்பட்டதுதான் அதிக கவனத்தை ஈர்த்தது. இதுதொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்களாக ‘செயற்கையான வாயுவை அதிக அளவில் வெளியிடும் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருவது; பருவநிலை மாற்றங்களை சமாளிக்க வளர்ந்த நாடுகள் மேலை நாடுகளுக்கு உதவுவது’ போன்ற பல முக்கிய விஷயங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான முன்னெடுப்பாக முதலில் ‘படிப்படியாக நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது’ என்பது முடிவெடுக்கப்பட்டு இருந்தநிலையில், இந்தியா தலைமையில் வளரும் நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து இருந்தது. குறிப்பாக நிலக்கரி திட்டங்களுக்கான மானியங்களை வழங்குவதை அரசுகள் நிறுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பொருளாதாரத்தில் முன்னேறி வரக்கூடிய நாடுகளுக்கு பெரும் சவாலான விஷயம் என எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து ஒப்பந்தத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி குறிப்பாக ‘படிப்படியாக நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது’ என்பதற்கு பதிலாக ‘படிப்படியாக நிலக்கரி பயன்பாட்டை குறைப்பது’ என்ற நிலைப்பாடானது எட்டப்பட்டது.

பருவநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதற்கு, இந்த திருத்தம் தடைக்கல்லாக தான் இருக்கும் என உலகளாவிய சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சூழல் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்த போதும், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிலர் “ ‘நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாகக் குறைப்பது’ என்று உலக நாடுகள் ஒருமித்த குரலில் தற்பொழுது முதல் முதலாக முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது” என கருத்து கூறியிருக்கின்றனர்.

இந்த கிளாஸ்கோ மாநாடு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான மிகப்பெரிய முதல்படிதான் என்றும், அடுத்தடுத்த பல முக்கிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு சிறப்பாக இது அமைந்திருப்பதாக, பருவநிலை மாற்றத்திற்கான செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். அவை செய்யப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த, உலக நாடுகள் அடுத்த ஓர் ஆண்டில் மேற்கொள்ளும் விஷயங்கள் குறித்து அடுத்த ஆண்டு மீண்டும் இத்தகைய உச்சி மாநாடு கூட்டப்பட வேண்டும் என ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கார்பனின் வெளிப்பாடு பூஜ்ஜியத்தை எட்டுவதற்கு ‘தற்பொழுது உலக நாடுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த மென்மையான போக்கு பயன்படாது’ என்றும் ‘இன்னும் கடினமான முடிவுகளை எடுத்தால் ஒழிய புவி வெப்பத்தை வரும் 2030ஆம் ஆண்டிற்குள் 1.5 டிகிரி க் கு குறைக்க வேண்டும் என்ற இலக்கினை அடைவது என்பது மிகவும் சிரமமான விஷயம்’ என்றும் இந்த மாநாட்டை தொடக்கத்திலிருந்து உற்று நோக்கும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com