ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் பன்றிக்காய்ச்சலால் 77 பேர் பலி?
பன்றிக்காய்ச்சல் காரணமாக அவ்வப்போது ஒரு சிலர் இறந்துவிடும் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், நாடு முழுவதும் இந்த ஒரு மாதத்திற்குள் மட்டும் பன்றிக் காய்ச்சலால் 77 பேர் உயிரிழந்திருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மிகச் சரியாக சொன்னால் 24 நாட்களுக்குள் இந்தப் பலி எண்ணிக்கை நடந்துள்ளது. மேற்கொண்டு இந்தியா முழுவதும் சுமார் 2500 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வறிக்கையின்படி தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வின்படி, கடந்த 24 நாட்களில் மட்டும் ராஜஸ்தானின் 60% பேர் ஆதாவது 1508 பேர் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு, இறுதியில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக குஜராத்தில் 438 பேர் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகரான டெல்லியில் 387 பேரும் ஹரியானவில் 272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் அனைத்து மாநிலங்களும் ஒரு சந்திப்பு நடத்தியது. அதில் பன்றிக் காய்ச்சல் நேய் வரமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பன்றிக்காய்ச்சலுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கவும் அறிவுறதப்பட்டது.
மேலும் சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூக்கில் நீர்வடிதல், உடல்வலி, சோர்வு உள்ளிட்டவை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. இது குறித்து அரசு சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. வீடியோ மற்றும் போஸ்டர்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வை அந்தந்த மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.