பூமியில் விழப்போகும் விண்வெளி ஆய்வகம்? அடுத்து என்ன நடக்கும்?
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
நாசாவின் சுமார் 22 ஆண்டுகள் பழமையான Neil Gehrels Swift Observatory, பூமியைச் சுற்றியுள்ள தனது உயரத்தைத் தொடர்ந்து இழந்து வருகிறது. அதாவது, நம் பூமியை நோக்கி தாழ்ந்து வருகிறது. சூரிய செயல்பாடுகளால் வளிமண்டல இழுவிசை அதிகரித்துள்ளதால், சுமார் 300 கி.மீ. உயரத்துக்குக் கீழே சென்றதும் Swift பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்துவிடும் என நாசா கணித்துள்ளது.
Swift-டை மீட்டு அதன் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்காக அரிசோனாவைச் சேர்ந்த Katalyst Space Technologies நிறுவனம் LINK என்ற செயற்கைக்கோளை உருவாக்கியது. ஜூலை 3-ஆம் தேதி ஏவப்பட்ட LINK, சில வாரங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து சுழலத் தொடங்கியது. பின்னர் கட்டுப்பாட்டை மீட்டெடுத்தாலும், இந்தப் பிரச்னையால் Swift-டைச் சந்திக்கும் திட்டம் சுமார் ஒரு மாதம் தாமதமானது.
இந்நிலையில், LINK-ன் இயக்கக் கட்டுப்பாட்டில் தொடர்ந்து பிரச்னைகள் இருப்பதால், Swift-டைப் பிடித்து உயர்ந்த சுற்றுப்பாதைக்கு மாற்றும் மீட்புப் பணி கைவிடப்படுவதாக நாசாவும் Katalyst நிறுவனமும் அறிவித்துள்ளன. இதனால், Swift-ட்டின் அறிவியல் ஆய்வுப் பணி இந்த ஆண்டின் பிற்பகுதியில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், LINK-ன் பயணம் இத்துடன் முடிவடையவில்லை. Swift-டைச் சந்திக்கும் முயற்சி, இனி மீட்புப் பணியாக அல்லாமல் தொழில்நுட்பச் சோதனையாக மேற்கொள்ளப்படும். இதன் மூலம் எதிர்காலத்தில் செயற்கைக்கோள்களை விண்வெளியிலேயே பழுதுபார்த்தல், நகர்த்துதல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளுக்குத் தேவையான முக்கியப் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் என நாசா தெரிவித்துள்ளது.
Swift இழக்கும் அறிவியல் திறனை நாசாவின் செயல்பாட்டில் உள்ள பிற விண்வெளி ஆய்வகங்கள் மூலம் ஈடுகட்டவும், விண்வெளி நிகழ்வுகளை விரைவாகக் கண்காணிப்பதற்கான புதிய வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடவும் நாசா திட்டமிட்டுள்ளது. மற்றொருபுறம், ஸ்விஃப்ட் விண்வெளி ஆய்வகம் இறுதியில் பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
'ஆனால் நேரடியாக பூமியின் தரையில் விழும் என்று அர்த்தமல்ல. அதன் உயரம் தொடர்ந்து குறைந்து, சுமார் 300 கி.மீ.க்கும் கீழே சென்றால் வளிமண்டலத்துக்குள் நுழையும். அப்போது வளிமண்டல உராய்வால் பெரும்பகுதி எரிந்து சிதைந்துவிடும்' என வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

