வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் - சீமான்

வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் - சீமான்
வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் - சீமான்

காடுகளை அழித்து நாட்டினைப் பாலைவனமாக்கும் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு - 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’காடுகளின் பரப்பளவை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவானது அதற்கு நேரெதிரான விதிகளைக் கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வனப்பாதுகாப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவர முயலும் ஒன்றிய அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

காடுகளை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக 1980ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்புச் சட்டத்தை முற்றுமுழுதாக நீர்த்துப்போகச் செய்யும் வகையிலேயே, புதிய வனபாதுகாப்புச் சட்டத்திருத்த வரைவு – 2021 ஐ ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. காடுகளுக்குள் வளர்ச்சிப் பணிகளை விரிவாக்கம் செய்யும்போது வனத்துறை அனுமதி பெறுவது கட்டாயமென்று இதுவரை நடைமுறையில் இருந்த விதியை மாற்றி, அனுமதி பெறத் தேவையில்லை என்று திருத்தியிருப்பதும், காடுகளில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்ததோடு, வன எல்லை என்பதிலிருந்து அவற்றை விடுவிக்கலாம் என்பது காடுகளின் பரப்பளவைக் குறைக்க உதவுமா? அதிகரிக்க உதவுமா? என்பதை முதலில் ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று, ஆழ்துளை குழாய்கள் மூலம் வனத்தின் நடுவே இருக்கும் கனிம வளங்களை எடுப்பதற்கு ஒப்புதல் அளித்திருப்பதும், காடுகளில் ஆராய்ச்சி, தகவல்களைச் சேகரிப்பு, அறிவியல் ஆய்வு மையங்களை அமைக்க அனுமதி அளித்திருப்பதும் காடுகளின் உயிரோட்டத்தைக் கெடுக்கும். மேலும், காடுகளில் உள்ள மரங்களுக்கும், உயிரினங்களுக்கும் நேரடியாக எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது வனப்பகுதிகளுக்குள் செயல்படுத்தப்படும் எல்லாத் திட்டங்களும் காடு சார்ந்த திட்டங்களாகவே கருதப்படும் என்ற விதியும் காடுகளின் அடர்த்தியையும், அதன் இயற்கை சமநிலையையும் சீர்குலைக்கவே உதவும்.

ஏற்கனவே நாட்டின், நில வளம், நீர் வளம், கடல் வளம், கனிம வளம் ஆகியவற்றைப் பல்வேறு சட்டத் திருத்தங்கள் மூலம் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்காகத் தாரைவார்த்துள்ள பாஜக அரசு, தற்போது மீதமுள்ள இயற்கை வளங்களான காடுகளையும் தாரைவார்ப்பதற்காகக் கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத் திருத்த வரைவைச் செயல்படுத்த எக்காரணம் கொண்டும் நாட்டு மக்கள் அனுமதிக்கக் கூடாது. காடுகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவற்றை அழித்துச் சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்கும் வகையில், வரையறுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் விதிகளை எதிர்த்து வரும் நவம்பர் முதல் தேதிக்குள் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை, ஒன்றிய அரசிற்குக் கருத்துக்கேட்பு தளத்தின் வாயிலாகத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com