துரத்திய காட்டு யானை: தலைதெறிக்க ஓடி உயிர்தப்பிய இளைஞர்கள்
சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானையை சீண்டிய இளைஞர்களை யானை துரத்தியதால் தலைதெறிக்க ஓடி மயிரிழையில் உயிர் தப்பினர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று மதியம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்தது. அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள், யானையின் அருகே சென்று செல்போனில் புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.
இதையடுத்து இளைஞர்கள் அருகே வருவதை கண்ட காட்டு யானை திடீரென இருவரையும் துரத்தத் தொடங்கியது. யானை துரத்துவதைக் கண்ட இளைஞர்கள் தலைதெறிக்க ஓடி மயிரிழையில் உயிர் தப்பினர். வனப்பகுதியில் உள்ள சாலைகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் சூழ்நிலையில் வனவிலங்குகளின் அருகே சென்று புகைப்படம் எடுப்பது மற்றும் வனவிலங்குகளை சீண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்