மண் வளத்தை மீட்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் பெரும் உணவுத் தட்டுப்பாடு - ஜகி வாசுதேவ்

மண் வளத்தை மீட்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் பெரும் உணவுத் தட்டுப்பாடு - ஜகி வாசுதேவ்
மண் வளத்தை மீட்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் பெரும் உணவுத் தட்டுப்பாடு - ஜகி வாசுதேவ்
'இந்தியாவில் மண் வளத்தை மேம்படுத்த நாம் தற்போது களப் பணியாற்றாவிட்டால், 2035 அல்லது 2040-ம் ஆண்டுக்குள் பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பல விஞ்ஞானிகள் நம்புகின்றனர்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் கூறினார்.
நதிகளை மீட்போம் இயக்கம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இதைத்தொடர்ந்து ஜகி வாசுதேவ் மற்றும் நதிகளை மீட்போம் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரும் இஸ்ரோ முன்னாள் தலைவருமான ஏ.எஸ்.கிரண் குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜகி வாசுதேவ் கூறுகையில், ''விவசாயம் நல்ல படியாக நடப்பதற்கும், நல்ல மகசூல் எடுப்பதற்கும் மண்ணில் குறைந்தப்பட்சம் 4 முதல் 6 சதவீதம் கரிம வளம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது இந்தியாவில் இருக்கும் மொத்த விவசாய நிலங்களில் 42 சதவீத மண்ணில் கரிம வள அளவு அரை சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இது மிகப்பெரிய பேரழிவாகும்.
ஒரு காலத்தில் காவேரி டெல்டா விவசாயிகள் நாட்டிலேயே செழிப்பான விவசாயிகளாக போற்றப்பட்டனர். அவர்கள் ஆண்டுக்கு 4 முறை பயிர் அறுவடை செய்து வந்தனர். ஆனால், தற்போது ஒரு முறை மட்டுமே அறுவடை செய்கின்றனர். இதற்கு காரணம், வருடத்தின் 5 மாதங்கள் காவேரி நீர் டெல்டா பகுதியை அடைவதே இல்லை. பலரும் மண் வளம் குன்றுவதையும், அதனால் ஏற்பட்டு வரும் பேரிழவுகளின் பாதிப்பையும் அறியாமல் இருக்கின்றனர். நம் கண்களுக்கு எளிதில் புலப்படும் வகையில் இருப்பதால், காற்று மற்றும் நீர் மாசுபாடுகளுக்கு அதிகம் கவனம் கிடைக்கிறது. ஆனால், அதை விட மிக முக்கிய பிரச்சினை மண் வளம் குன்றுவது தான்.
காற்று, நீர் மாசுபாடுகள், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசு ஆகியவை எல்லாம் சுற்றுச்சூழல் பிரச்னைகள் அல்ல. அவை ‘கார்ப்பரேஷன் பிரச்னைகள்’. அதற்கு உரிய சட்டங்களை சரி செய்து, அதை கடுமையாக அமல்படுத்தினால், அந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியும். ஆனால், அதுபோல் குன்றிய மண் வளத்தை சில ஆண்டுகளுக்குள் மேம்படுத்த முடியாது. மண்ணில் கரிம வளம் அரை சதவீதக்கும் கீழ் சென்றால், அதை மீண்டும் வளமாக்க கிட்டதட்ட 150 ஆண்டுகள் தேவைப்படும் என வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
மண் வளத்தை மீட்டெடுக்க விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியம். ஆகவே, மண் வளம் காக்கும் சுற்றுச்சூழல் பணியில் முதல் முறையாக விவசாயிகள் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர். பல நூறு ஆண்டுகளாக இயற்கை வழியில் விவசாயம் செய்த நம் விவசாயிகள் கடந்த 40 ஆண்டுகளில் செயற்கை விவசாயத்துக்கு மாறினர். இது மண்ணின் வளத்தை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. அதை சரிசெய்ய விவசாய நிலங்களில் மரங்களும், விலங்குகளின் கழிவுகளும் தேவை. அதற்காக தான் நாம் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி வருகிறோம்.
இது ஒரு புதிய பரிசோதனை அல்ல. ஏற்கனவே ஈஷாவின் 20 ஆண்டு கால களப் பணியால் சுமார் 1 லட்சம் விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறி உள்ளனர். அதன்மூலம் மண் வளம் மேம்படுவதும் விவசாயிகளின் பொருளாதாரம் அதிகரித்து இருப்பதும் கண்கூடாக நிரூபணமாகி உள்ளது” என்றார் ஜகி வாசுதேவ்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் கூறுகையில், “காவேரி கூக்குரல் திட்டம் வெற்றி பெற்றால், அது ஒட்டுமொத்த உலகிற்கே முன்மாதிரி திட்டமாக மாறும்” என்றார்.
காவேரி கூக்குரல் இயக்கமானது கர்நாடகாவில் காவேரி நதிப் படுகையில் அமைந்துள்ள 9 மாவட்ட விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்தில் ஈடுப்படுத்த தீவிரமாக களப் பணியாற்றி வருகிறது. இதற்காக ‘மர நண்பர்கள்’ என்ற பெயரில் 890 தன்னார்வலர்களை இவ்வியக்கம் நியமித்துள்ளது.
ஒவ்வொருவரும் தலா 2 கிராம பஞ்சாயத்துக்கள் என்ற முறையில் மொத்தம் 57 தாலுக்காக்களில் உள்ள 1,785 கிராம பஞ்சாயத்துக்களில் விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் வீடு வீடாக சென்று விவசாயிகளிடம் நேரில் பேசி அவர்களுக்கு தேவையான மரங்களின் எண்ணிக்கை, மர வகைகள், நிலப்பரப்பு உள்ளிட்ட தகவல்களை நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் சேகரிக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com