திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப் பாளையம் ஊராட்சியில் 20-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இப்பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் கடந்த வாரம் ஷாகிதா என்ற கர்ப்பிணி டெங்கு காய்ச்சலில் உயிரிழந்தார். அதேபோல 4-ஆம் வகுப்பு மாணவர் ஷாகித் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவர் லோகேஷ் டெங்குவுக்கு சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியில் 20-க்கும் அதிகமானோருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காய்ச்சலோடு மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
டெங்கு பரவல் அதிகரித்து வருவதையடுத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.