\
El Nino
El Nino Reuters

ஒரே பகுதியில் மட்டும் 66,800.. வெப்பத்தின் அடுத்த பேரழிவு? எல் நினோ குறித்து அதிர்ச்சி கணிப்பு!

அடுத்த ஆறு மாத எல் நினோ வெப்ப அலையால் உலகளவில் 4.5 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Published on

செய்தியாளர் - M. மீரா

பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் நீரின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றமே எல் நினோ எனப்படுகிறது. இதன் தாக்கம் பசிபிக் கடல் பகுதியுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை, மழைப்பொழிவு உள்ளிட்ட வானிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். உலகம் இதுவரை சந்தித்த மிக வலுவான எல் நினோ (El Nino) நிகழ்வுகளில் ஒன்றாக உருவாகி வரும் நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் இதனால் ஏற்படும் கூடுதல் வெப்பத்தால் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

el nino
el nino reuters

சிகாகோ பல்கலைக்கழகத்தின் Climate Impact Lab வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2027 பிப்ரவரி வரை எல் நினோவால் ஏற்படக்கூடிய கூடுதல் வெப்பம் மற்றும் வழக்கமான ஆண்டில் ஏற்படும் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் ஒப்பிடப்பட்டுள்ளன.

ஆய்வின்படி, உலகின் நிலப்பரப்பு வெப்பநிலை சுமார் 1.2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம். மேலும், சராசரி ஆண்டை ஒப்பிடும்போது மிகவும் அதிக வெப்பம் நிலவும் நாட்களின் எண்ணிக்கை 44 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பத்தின் தாக்கம் ஏற்கெனவே அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியம் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.

el nino
el nino reuters

சஹேல் பகுதியில் மட்டும் சுமார் 66,800 கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் நைஜீரியாவில் மட்டும் 31,400, இந்தோனேசியாவில் 19,300, சூடானில் 17,600 உயிரிழப்புகள் ஏற்படலாம் என ஆய்வு கூறுகிறது.

பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் சேர்த்து சுமார் 19,400 கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படலாம் எனவும், இந்தியாவில் 15,800, பிரேசிலில் 13,300 உயிரிழப்புகள் ஏற்படலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வெப்பமான பகுதிகளில் மேலும் சில டிகிரி வெப்பநிலை அதிகரிப்பது மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என ஆய்வின் இணை ஆசிரியர் மைக்கேல் கிரீன்ஸ்டோன் தெரிவித்துள்ளார். பணக்கார நாடுகளில் குளிர்சாதன வசதி, சீரான குடிநீர் மற்றும் மருத்துவச் சேவைகள் கிடைப்பதால் பாதிப்பைச் சமாளிக்கும் திறன் அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், இந்த ஆண்டின் எல் நினோ ஜூன் மாதத்தில் உருவாகத் தொடங்கியுள்ளதாகவும், 2027 பிப்ரவரி வரை நீடிக்கும் வாய்ப்பு 100 சதவீதம் இருப்பதாகவும் ஐ.நா. வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக எல் நினோவின் தாக்கம் மேலும் தீவிரமடைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

El Nino
45 நாடுகளைப் பாதிக்கும் எல் நினோ.. 4.9 கோடி பேருக்கு உணவுத் தட்டுப்பாடு.. எச்சரிக்கும் ஐநா!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com