நீர்த்துப்போகிறதா பிளாஸ்டிக் தடை உத்தரவு: சமூக ஆர்வலர்கள் வேதனை!
பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து 40 நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் மீண்டும் மெல்ல மெல்ல பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் 5-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள், வியாபாரிகள் மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் டிச. 31 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தாள், தட்டுகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. சிறிய பெட்டி கடைகள் முதல் ஹோட்டல்கள் என எல்லா கடைகளிலும் இனி பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இல்லை. வரும் போதே துணிப்பையை கொண்டுவரவும் என எழுதி ஒட்டினார்கள். சுற்றுப்புறத்துக்கும், சுகாதாரத்துக்கும் நல்லது தானே என அனைவருமே தமிழக அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்தனர். கையேந்தி உணவகங்கள் முதல் பெரிய ஹோட்டல்கள் முதல் பிளாஸ்டிக் மாறி வாழை இலைகள் வந்தன. ஆனாலும் தமிழக அரசின் இந்த அதிரடி சட்டம் உள்ளூர் வியாபாரிகளுக்கு மட்டும் தானா என்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் தயாரிப்புகள் பிளாஸ்டிக் கவர்களை பயப்படுத்துவதாகவும் எதிர்ப்பு குரல்களும் கிளம்பின.
இந்நிலையில் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து 40 நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் மீண்டும் மெல்ல மெல்ல பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பல கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் தற்போது கிடைக்க தொடங்குவதாகவும் கூறப்படுகிறது. உள்ளூருக்குள்ளேயே பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பை குடிசைத்தொழிலை போல் செய்து எளிதாக கடைகளுக்கு கிடைக்கச்செய்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, பிளாஸ்டிக் பைகளை தடை செய்வதிலேயே அரசு குறியாக இருந்ததே தவிர அதற்கான மாற்றுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விதிகளை அரசு அமல்படுத்திவிட்டு அமைதியாக இருந்துவிடாமல், தொடர் சோதனைகள், அபராதம் என கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே போல் ஒரு விதியை அரசால் மட்டுமே வெற்றியடைய செய்ய முடியாது, அதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுமே சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.