காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மதுரை: முதல்வருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மதுரை: முதல்வருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மதுரை: முதல்வருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்
Published on
'காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் மதுரை’ என இந்திய வானிலை துறையின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியிருப்பதை, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என்று இந்திய வானிலைத்துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில், அவர் தெரிவித்திருப்பதாவது: ‘காலநிலை பேரழிவால் வரக்கூடிய பத்தாண்டுகள் மானுடத்திற்கான இருத்தியலை உறுதிசெய்வதற்கான தசாப்பதமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் தெரிவித்துள்ளபடி, மானுட வரலாற்றின் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த காலமாக இந்த காலம் இருக்கிறது.
ஒன்றிய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் "இந்திய வானிலை துறையின்  “Observed Rainfall Variability and Changes over Tamil Nadu State” ஆய்வு அறிக்கை  வெளிவந்துள்ளது. இவ்வறிக்கையின் படி தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களிலேயே காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட போகிற மாவட்டமாக மதுரை இருப்பது தெரிய வருகிறது.
மதுரை மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழை பொழிவு கடுமையாக குறைய ஆரம்பித்துள்ளது என்றும், தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் மதுரை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பெய்கின்ற மழையின் அளவு குறைந்து வருகிறது என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
இதில் வருட சராசரி மழை பொழிவு குறிப்பிடத்தக்க அளவு குறைகின்ற தமிழகத்தின் ஒரே மாவட்டம் மதுரையே என்கிறது இந்த ஆய்வு. ஒவ்வொரு மாதமும் பெய்கின்ற மழையின் அளவை கணக்கில் கொண்டு, எல்லா மாதமும் சராசரி மழை பொழிவு குறைந்து வரக்கூடிய மாவட்டமாக மதுரையை சொல்கிறது புவி அறிவியல் துறையின் ஆய்வு. அதுமட்டுமல்லாமல் வறண்ட நாட்களின் (Dry days) எண்ணிக்கையும் மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கிறது என்றும் தெரிவிக்கிறது.
இவற்றை கணக்கில் கொண்டு, நிகழவிருக்கும் ஆபத்தினை தடுக்க கீழ்கண்ட முன்னெடுப்புகளை செய்வது அவசியமாகிறது.
* மதுரை மாவட்டத்தின் பசுமை போர்வையை 33%ஆக அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள காடுகளை வேறு எந்த பயன்பாட்டிற்கும் மாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும், அக்காடுகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும். 
* மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்து அவற்றை முழுக் கொள்ளளவிற்கு தூர்வார வேண்டும். 
* வைகையின் பிறப்பிடமான மேற்கு மலைகளை பாதுகாக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 
* வைகை நதியை ஐந்து மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டு பகுதியாக இல்லாமல் ஒற்றை  நிர்வாக அலகின் கீழ் கொண்டுவர வேண்டும்.
* மதுரை மாவட்டம் தமிழகத்தின் கலாச்சார தலைநகரம், அதன் சூழலை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், காற்று மாசை குறைப்பதற்கும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com