சூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா?

சூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா?
சூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா?

இரண்டு வாரமாக கப்பலில் தொடரும் எண்ணெய் கசிவு காரணமாக நாட்டில் சூழலியல் அவசரநிலையை பிறப்பித்துள்ளது மொரீசியஸ் அரசு. மேலும் பிரான்ஸ் நாட்டிடம் உதவியையும் கோரியுள்ளார் மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகுநாத்.

எம்.வி.வகாஷியோ கப்பலில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை இரண்டு வாரங்களாக தடுக்க முடியாத காரணத்தால், சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான கடல் கடுமையாக மாசுபடுத்தப்பட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனத்திற்கு சொந்தமான இந்த எண்ணெய் கப்பல், 3,800 டன் எரிபொருளை சுமந்து கொண்டு வந்தது, இக்கப்பல் ப்ளூ பே கடலின் ஆமைகள் பாதுகாப்பு பூங்காவிற்கு அருகிலுள்ள பாறைகளில் மோதியதனால் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அதன்பிறகு சுற்றுச்சூழல் அமைச்சகம் கசிவை தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது.

ஆனால் எண்ணெய் கசிவானது பவளப்பாறைகள், தடாகங்கள் மற்றும் வெள்ளை மணல் கரைகளுக்கும் பரவியது. இதனால் பசுமை சுற்றுலா தலமாக புகழ்பெற்ற மொரீஷியஸின் நீலக்கடல்கள் கசிவு மூலம் மைகறுப்பு நிறத்தில் மாறியுள்ளது. இதுபற்றி கூறும் கப்பல் அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தினர் மோசமான தட்பவெப்பநிலை மற்றும் அதிக கடல்அலைகள் காரணமாக மீட்புப்பணிகளில் பல்வேறு தடைகள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

கசிவு நடந்த பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் “ இந்த வார இறுதியில் மோசமான வானிலை காரணமாக நெருக்கடி மோசமடையக்கூடும் அதனால் படகிற்கு என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. வகாஷியோ கப்பல் மூழ்கியது மொரீஷியஸுக்கு பெரும் ஆபத்தை பிரதிபலிக்கிறது. சிக்கித் தவிக்கும் கப்பல்களைத் மீட்பதற்கான திறன்களும், நிபுணத்துவமும் நம் நாட்டிற்கு இல்லை, எனவே நான் பிரான்ஸ் நாட்டின் உதவியைக் கோரியுள்ளேன்" என்று அவர் கூறினார்.

 மொரிஷியஸ் உணவு மற்றும் சுற்றுலாவுக்காக அதன் கடல்களை முக்கியமாக சார்ந்துள்ளது, உலகின் மிகச்சிறந்த பவளப்பாறைகளையும் இத்தீவு கொண்டுள்ளது. அதனால் இந்த பெரிய எண்ணெய் கசிவு, பேரழிவு தரக்கூடிய சேதத்தை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com