காஷ்மீர்: வழக்கத்தைவிட கடுமையான குளிர்... மைனஸில் செல்லும் வெப்பநிலை!
காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. பொதுவாகவே நவம்பர், டிசம்பர் மாதங்களில் அங்கு அதிகப்படியான குளிர் நிலவிவரும் என்றாலும் வழக்கத்தை விட 2.7 முதல் 5.7 டிகிரி வரை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் அதிக குளிர் நிலவி வரும் என்றாலும், தெளிவான வானம் காரணமாக ஸ்ரீநகர் மற்றும் பல இடங்களில் இதுவரை இல்லாத அளவு குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த பருவத்தில் இரவு வெப்பநிலை இயல்பை விட 2.7 முதல் 5.7 டிகிரி வரை குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 5.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, இது முந்தைய இரவு மைனஸ் 3.3 டிகிரி செல்சியஸிலிருந்து குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிலும் நேற்று இரவு, இதுவரை இல்லாதவரையில் மிகக்குளிரான இரவை சந்தித்ததாகவும், இரவு வெப்பநிலை இயல்பை விட 4.8 டிகிரி குறைந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த குளிரினால், பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் உறைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற பனிச்சறுக்கு பகுதியான குல்மார்க்கில் இரவு வெப்பநிலை மைனஸ் 9.0 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது. இதனால் அப்பகுதி நேற்று அதீத குளிராக இருந்துள்ளது.
மேலும், அமர்நாத் யாத்திரை முகாமாக செயல்படும் பஹல்காம், பகுதியில் குறைந்தபட்சமாக மைனஸ் 8.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. காஷ்மீரின் நுழைவாயில் நகரமான காசிகுண்டில் மைனஸ் 6.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாராவில் குறைந்தபட்சம் மைனஸ் 4.5 டிகிரி செல்சியஸ் மற்றும் தெற்கு காஷ்மீரில் உள்ள கோகர்நாக்கில் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதனால் இருமல் மற்றும் ஜலதோஷம் போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எத்தனை நாட்கள் குளிர் நீட்டிக்கும்?
டிசம்பர் 18 ஆம் தேதி வரை காஷ்மீரில் முக்கியமாக வறண்ட வானிலை இருக்கும் என்றும், டிசம்பர் 12 ஆம் தேதி பள்ளத்தாக்கின் உயரமான பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் லேசான பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.