'மரம்' தங்கசாமி நினைவு நாள்: 2.37 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக ஈஷா மையம் தகவல்

'மரம்' தங்கசாமி நினைவு நாள்: 2.37 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக ஈஷா மையம் தகவல்
'மரம்' தங்கசாமி நினைவு நாள்: 2.37 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக ஈஷா மையம் தகவல்

“மறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் 'மரம்' தங்கசாமி ஐயாவின் நினைவு தினத்தையொட்டி (செப்.16) 'காவேரி கூக்குரல்' இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 2.37 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டனர்” என்று ஈஷா அறக்கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான 'மரம்' தங்கசாமி மரம் நடும் பணியில் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். சுற்றுச்சூழல் பணிக்காக சுமார் 50 ஆண்டுகள் சேவையாற்றியவர். அவரின் சேவையை பாராட்டி தமிழக அரசு 2008-ம் ஆண்டு அவருக்கு அறிஞர் அண்ணா விருதினை வழங்கி கெளரவித்தது.

ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் இணைந்து பணியாற்றிய அவர் கடந்த 2018-ம் ஆண்டு காலமானார். இதையடுத்து, அவரின் சேவையை நினைவுகூரும் விதமாக அவருடைய நினைவு நாளில் விவசாயிகளை கொண்டு லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாட்களில் 2.37 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் நடவு செய்து சாதனை படைத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருச்சியில் 6 இடங்களில் 39 ஏக்கரில் 11,300 மரக்கன்றுகளும், புதுக்கோட்டையில் 10 இடங்களில் 49 ஏக்கரில் 13,570 மரக்கன்றுகளும், திருவாரூரில் 4 இடங்களில் 15 ஏக்கரில் 2,650 மரக்கன்றுகளும், தஞ்சாவூரில் 9 இடங்களில் 77 ஏக்கரில் 6,685 மரக்கன்றுகளும், மயிலாடுதுறையில் 4 இடங்களில் 12 ஏக்கரில் 2,205 மரக்கன்றுகளும், பெரம்பலூரில் 9 இடங்களில் 36 ஏக்கரில் 3,643 மரக்கன்றுகளும் விவசாயிகள் மூலம் நடப்பட்டது.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாயிகளின் விருப்பத்தின்படி, அவர்களின் மண் மற்றும் நீரின் தன்மையை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மரங்களை நட இலவச ஆலோசனை வழங்கினர். அதன் அடிப்படையில், தேக்கு, மகோகனி, வேங்கை, மலைவேம்பு, செம்மரம், சந்தனம், மஞ்சள் கடம்பு, ஈட்டி போன்ற பண மதிப்பு மிக்க மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். இதன்மூலம் அடுத்த சில ஆண்டுகளில் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவதோடு மட்டுமின்றி அங்குள்ள சுற்றுச்சூழலும் ஒருசேர மேம்பட வாய்ப்புள்ளது.

இதற்கு முன்பு, மரம் தங்கசாமியின் 2020-ம் ஆண்டு நினைவு தினத்தின்போது 1.26 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்தனர்" என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com