மேற்கு தொடர்ச்சி மலைக்கு என்னதான் நேர்ந்தது?..நம் பிள்ளைகளுக்கு சொல்ல மறந்த கதை..!!

மேற்கு தொடர்ச்சி மலைக்கு என்னதான் நேர்ந்தது?..நம் பிள்ளைகளுக்கு சொல்ல மறந்த கதை..!!
மேற்கு தொடர்ச்சி மலைக்கு என்னதான் நேர்ந்தது?..நம் பிள்ளைகளுக்கு சொல்ல மறந்த கதை..!!

உலகம் முழுவதும் மழைக்காடுகள் ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதாக சொல்கிறார் சூழலியலாளரான ஆற்றல் பிரவீன் குமார்.

அவர் கூறுகையில், ‘’மலைக்கும் ஆழிக்கும் இடையில் உள்ள மலையாள தேசம் இன்று கண்ணீரில் மிதப்பதற்கு காரணங்களில் ஒன்று நாம் தினமும் அருந்தும் தேநீர்.

ஆம் மொட்டை அடிக்கப்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலைகள்; துண்டாடப்பட்ட யானை வழித்தடங்கள். இது அத்தனையும் நடந்தது கடந்த 150 ஆண்டுகளில் மட்டுமே.

அமேசான் காடு பற்றியும், நெப்போலியன் படையெடுப்பு பற்றியெல்லாம் நம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருகிறோம்.உண்மையில் நம் மேற்குத்தொடர்ச்சி மலையின் பல்லுயிர் சிறப்பு பற்றியோ, நம் மூதாதையர்கள் நீரை சேகரித்த வரலாறு பற்றியோ நம் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.

பொழில் என்று ஒரு அழகான தமிழ்ச் சொல் உள்ளது. பொழில் (Rainforest) என்பது அதிக மழை பெய்வதால் செழித்து இருக்கும் காடுகளை அப்படி சொல்வதுண்டு. இச்சொல் இன்றைய அறிவியலில் மழைக்காடு என்று குறிப்பிடப்படுகிறது.

பொதுவாக ஆண்டு மழைப் பொழிவானது 1,750 மில்லி மீட்டருக்கும், 2000 மி.மீ.க்கும் இடையில் உள்ள காடுகளே மழைக்காடுகள் ஆகும். அதிக மழையும், சூடான தட்பவெப்பமும் உயரமான மரங்களும் கொண்ட பூமத்திய ரேகைப் பகுதியில் காணப்படும் காட்டுப் பகுதிகள் இவை .

இப்பூமியின் பரப்பளவில் இரண்டு பங்குங்கும் குறைவாகவே இருந்தாலும், இவ்வுலகின் ஐம்பதுக்கும் மேற்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் வசிக்காத உயிரினங்கள் பலவற்றை இம்மழைக்காடுகளில் காணலாம்.

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மிகுந்திருந்த இந்த மழைக்காடுகள் தேயிலை, காப்பி போன்ற ஓரே வகையான பயிர்த் தோட்டங்களுக்காகவும், நீர்மின் திட்டங்களுக்குகாகவும், மரம் வெட்டும் தொழிலுக்காகவும் கடந்த சில நூற்றாண்டுகளாக அழிக்கப்பட்டு வருகிறது . இதனால் மழைக்காடுகள் பல இடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தொடர்பற்று துண்டுதுண்டாகிப் போனது.

மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆனைமலைப் பகுதியிலுள்ள வால்பாறையில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சைப் பசேலென்று தேயிலைத் தோட்டங்களைக் காணலாம். காப்பி, தேயிலை, ஏலம், யூக்கலிப்டஸ் போன்ற ஒரே வகையான தாவரத் தோட்டங்களின் நடுவே இவை பயிரிடத் தகுதியில்லாத இடங்களில் இன்னும் அழிக்கப்படாத மழைக்காடுகள் சிறியதும் பெரியதுமாக ஆங்காங்கே தீவுகளைப் போல காட்சியளிக்கும். இவற்றை மழைக்காட்டுத் தீவுகள், துண்டுச்சோலை என்றும் அழைக்கின்றனர்.

இத்துண்டுச் சோலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் வால்பாறையைச் சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகம், பரம்பிகுளம் புலிகள் காப்பகம், வாழச்சால் வனப்பகுதி, எரவிகுளம் தேசியப் பூங்கா , சின்னார் சரணாலயம் போன்ற இடங்களில் தொடர்ந்த பரந்து விரிந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அமைந்துள்ளன.

இதனால் சுற்றிலும் வனத்தைக் கொண்ட வால்பாறை பகுதியில் பலவிதமான அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளையும், தாவரங்களையும் பார்க்க முடியும். இந்த உயிரினங்களுக்கெல்லாம் புகலிடமாக இத்துண்டுச் சோலைகள் உள்ளன.

ஒரு மழைக்காட்டு மர விதை முளைத்து, துளிர்விட்டு, நாற்றாகி மரமாக உயர்ந்து வளர்வதற்குள் பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது. வறட்சியிலிருந்தும், நாம் காட்டுக்குள் கொண்டு செல்லும், ஆடு, மாடுகளிடமிருந்தும், அங்கு வாழும் தாவர உண்ணிகளிடமிருந்தும், சூரிய ஒளிக்காக, நீருக்காக அதனைச் சுற்றியுள்ள தாவரங்களிடமிருந்தும், களைச் செடிகளிடமிருந்தும் எல்லாவற்றிற்கும் மேலாக மரவெட்டியின் கோடாலியிடமிருந்தும் தப்பிக்க வேண்டும். ஒரு மரம், நடப்பட்டத்திலிருந்து 15 மீட்டர் வரை வளர்வதற்கு சுமாராக 12 ஆண்டுகள் பிடிக்கிறது.

இப்புவிக்கும், மனிதக்கும் தேவையான இப்படிப்பட்ட மழைக்காடுகள் உலகில் எல்லா பகுதிகளிலும் ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு கால் பந்தாட்ட மைதானம் அளவுக்கு தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. இதை அடுத்த தலைமுறைக்கு இப்போதே கற்றுக்கொடுக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com