ஏஐ, டிஜிட்டல்மயமாக்கலில் தாவரவியல்.. மாறும் பூக்கும் காலம்.. விஞ்ஞானிகள் கவலை!
லண்டன் கியூ கார்டன் வெளியிட்ட அறிக்கை உலக தாவர, பூஞ்சை இனங்கள் வேகமாக அழிவை நோக்கிச் செல்வதை எச்சரிக்கிறது.
40 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் ஆய்வின் அடிப்படையில் லண்டனின் ராயல் தாவரவியல் பூங்காவான 'கியூ கார்டன்' அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 29 ஆயிரம் தாவர வகைகளும், 411 பூஞ்சை வகைகளும் அழியும் அபாயத்தில் இருப்பதாக இந்த அறிக்கை எச்சரிக்கிறது. ஆனால், இதுவரை அறியப்பட்ட தாவரங்களில் வெறும் 18 சதவீதமும், பூஞ்சைகளில் 0.6 சதவீதமும் மட்டுமே முறையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அறிவியல் உலகுக்கு இன்னும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தாவரங்களும், 20 லட்சத்துக்கும் அதிகமான பூஞ்சைகளும் கண்டறியப்படாமலேயே உள்ளன. இதனால் உலகளவில் உயிரினங்கள் அழியும் வேகம் நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இருப்பினும், கியூ கார்டன் நிறுவனம் இதுவரை 74 லட்சம் தாவர மாதிரிகளை டிஜிட்டல்மயமாக்கியுள்ளது. இந்தத் தரவுகளைக் கொண்டு ஏஐ மூலம் ஆய்வு செய்ததில், கடந்த ஒரு நூற்றாண்டில் தாவரங்கள் பூக்கும் காலம் ஒரு தசாப்தத்துக்கு சராசரியாக இரண்டரை நாட்கள் என்ற அளவில் மாறியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் காலமாற்றம் தாவரங்களுக்கும், தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளுக்கும் இடையிலான தொடர்பைப் பாதித்து, எதிர்கால உணவுச் சங்கிலிக்கு பெரும் சவாலாக மாறும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த ஏஐ தொழில்நுட்பங்கள் மூலம், மிக வேகமாக அழிந்துவரும் தாவர இனங்களைக் கண்டறிந்து அவற்றை மீட்டெடுக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

