ஆக்சிஜனை அள்ளி தரும் கடலை காப்பாற்றுகிறோமா நாம்?

ஆக்சிஜனை அள்ளி தரும் கடலை காப்பாற்றுகிறோமா நாம்?
ஆக்சிஜனை அள்ளி தரும் கடலை காப்பாற்றுகிறோமா நாம்?

இன்று உலக சமுத்திர தினம். 1992 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டில் நடந்த உச்சி மாநாட்டில், இதற்கான கோரிக்கையை கனடா முன்வைத்தது. அதன் பின்பு 2008 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்க அனுமதித்து அறிக்கை வெளியிட்டது. அதனையடுத்து ஆண்டுதோறும் உலக மக்களால் ஜூன்.8 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகத்தின் கடல்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் வகையில் இத்தினம் எல்லா நாட்டு மக்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

நாம் வாழும் இந்த உலகமானது, மூன்று பங்கு நீராலும் ஒரு பங்கு நிலத்தாலும் சூழ்ந்துள்ளது. உலக மக்களின் வாழ்வாதாரத்தில் கடல்களின் பங்கு சொல்ல முடியாத அளவிற்கு பயன் தருகிறது. கடல் வாணிபங்கள், கடல் உணவுகள், கடல் சார் பொருட்கள் போன்ற பல்வேறு வணிக காரணங்களுக்காக பல்வேறு நாடுகளும் கடலையே சார்ந்து வாழ்ந்து வருகின்றன.

அதுமட்டுமல்லாது உலக மக்கள் சுவாசிப்பதற்கான 50% ஆக்சிஜன் கடலில் இருந்துதான் பெறப்படுகிறது. அதில் குறிப்பாக நமது இந்தியா மூன்று பக்கமும் கடல்களால் சூழப்பட்டுள்ளது. இந்தக் கடலில் உருவாகும் காற்றழுத்தத்தின் மூலம்தான் நமக்கு மழை கிடைக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் சூழலில் அடுத்தக்கட்டமாக கடல் நீரே மாற்றாக இருக்கப்போகிறது. 


விடுமுறையை களிக்க, அனைவரும் முதலில் தேர்வு செய்யும் இடமாக கடற்கரை விளங்குகிறது. அங்கு சென்று நாம் கடலை அசுத்தப்படுத்தாமல் இருக்க ஏனோ மறந்து விடுகிறோம். உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு கடல்களை பிளாஸ்டிக்கினால் நிரப்பி கடல்வாழ் மற்றும் கடல்சார் உயிரினங்களையும், பவளப்பாறைகளையும் நாம் அழித்து வருகிறோம். 

அழிந்து வருவது அதுமட்டுமல்ல அதை சார்ந்து வாழும் மக்களும்தான் என்பதை பல நேரங்களில் மக்கள் மறந்து விடுகிறோம். இயற்கை கொடுத்த இந்த அற்புத கொடையான கடலை பாதுகாப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்ப்போம் குறிப்பாக கடற்கரை பகுதியிலாவது பயன்படுத்தாமல் தவிர்க்க இந்த நாளில் முடிவு எடுப்போம்.

இதனை வலியுறுத்தி ஒடிசாவிலுள்ள புரி கடற்கரையில் மணற்சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார், மணற்சிற்பக் கலைஞர். அதுமட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் #WorldOceansDay என்ற ஹேஸ்டேக் பலராலும் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com