\
காயங்களுடன் சுற்றிவரும் காட்டு யானையை முதுமலை கொண்டுசெல்ல வனத்துறை கோரிக்கை

காயங்களுடன் சுற்றிவரும் காட்டு யானையை முதுமலை கொண்டுசெல்ல வனத்துறை கோரிக்கை

காயங்களுடன் சுற்றிவரும் காட்டு யானையை முதுமலை கொண்டுசெல்ல வனத்துறை கோரிக்கை
Published on

காயங்களுடன் சுற்றிவரும் காட்டு யானைக்கு வனத்துறையினர் பழங்களில் மருந்துகளை வைத்து தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். யானையை பிடித்து முதுமலை கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்காக உயர் அதிகாரிகளிடம் அனுமதியும் கேட்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உடலில் காயங்களுடன் ஆண் காட்டு யானை ஒன்று சுற்றி திரிகிறது. இந்த யானைக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக வனத்துறையினர் பழங்களில் மருந்துகளை வைத்து கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மருந்துகளை உட்கொள்ளும்போது குணமடையும் அந்த யானை அடுத்த சில மாதங்களில் மீண்டும் காயம் பெரிதாகி பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் காயங்களுடன் சுற்றித்திரியும் யானையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. யானையின் உண்மை நிலை குறித்து தெரியாத பலரும் யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சிலர் வனத்துறையினருக்கு எதிரான கண்டனங்களையும் எழுப்பினர்.

இதையடுத்து தற்போதும் வனத்துறையினர் காயமடைந்து சுற்றித்திரியும் யானைக்கு பழங்களில் மருந்து வைத்து கொடுத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருந்துகளை உட்கொள்ளும் யானை நல்ல உடல்நலத்தோடு கூடலூர் பகுதியில் சுற்றித் திரிகிறது. இந்த நிலையில் வனத்துறை தரப்பில் காயமடைந்த யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக கூடலுர் வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு யானையின் நிலை குறித்த அறிக்கையும் அனுப்பி இருக்கின்றனர். ஒருவார காலத்திற்குள் யானையை பிடித்து முதுமலை கொண்டுசென்று சிகிச்சை அளிப்பதற்கான அனுமதி கிடைக்கும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com