சுற்றுச்சூழல்
“வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்குப் படை எடுக்காது எனச் சொல்ல முடியாது” - சூழலியல் ஆய்வாளர்
“வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்குப் படை எடுக்காது எனச் சொல்ல முடியாது” - சூழலியல் ஆய்வாளர்
வடமாநிலங்களை ஆட்டிப்படைத்து வரும் வெட்டிக் கிளிகள் தமிழகத்திற்கு வராது என முன்கூட்டியே கூற முடியாது எனச் சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுல்தான் இஸ்மாயில் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் தொற்றைக் கையாள முடியாமல் உலக நாடுகள் திக்குமுக்காடிக் கொண்டிருக்க, அடுத்தப் பிரச்னையாக வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்கெனவே கென்யா, சோமாலியா நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ நா அமைப்பு இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் என எச்சரித்திருந்தது. ஆனால் இதனிடையே இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு தக்காண பீடபூமியைத் தாண்டி தமிழகத்திற்கு வரும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு எனத் தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு வேளாண்துறை சார்பாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தத் திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய தலைமுறை ‘நியூஸ் 360 டிகிரி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுல்தான் இஸ்மாயில் இந்த விவகாரம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பேசும்போது, “அப்படி வராது என்று முன்கூட்டியே கணிக்க முடியாது என்றும். காற்றின் வேகம் மற்றும் திசைதான் அதைத் தீர்மானிக்கும்” என்றும் அவர் கூறினார். எங்கெல்லாம் அதற்குச் சாப்பிட உணவுகள் கிடைக்கிறதோ அங்கு எல்லாம் அவை போகும். ஒருவேளை பருவநிலை மாற்றம் வந்தால் தமிழகம் வர, அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகவே முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது நல்லது” என்றார்.
ஏற்கெனவே 93 ஆம் ஆண்டு இதே போல ஒரு நிலை வந்தது. ஆனால் தமிழகம் பாதிக்கவில்லை. 2011 கூட சிறிய அளவில்தான் இருந்தது. அப்படி இருக்க இதை நாம் எப்படி எடுத்துக் கொள்ளலாம்? என்ற கேள்விக்கு அவர், “அப்போது இருந்த சூழல் வேறு, சுற்றுச் சூழல் வேறு. இப்போது உள்ள சூழல் வேறு சுற்றுச்சூழல் வேறு. லட்சக் கணக்கில் கோடிக்கணக்கில் வருகின்றன வெட்டுக்கிளிகள். ஆகவே அவை எவ்வளவு உணவு தானியங்களைச் சாப்பிடும் என்று கணிக்க முடியாது. பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி இந்தப் பூச்சிகளைக் கொல்வது ஒரு பக்கம்.
ஆனால் அப்படிப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்து சுற்றுச்சூழலையும் பாதிக்கும். இதற்கான மருந்தை வானிலிருந்து தூவ வேண்டும். அப்போதுதான் மருந்தைப் பல இடங்களில் பரவலாகக் கொண்டு சென்று தெளிக்க முடியும். சின்ன சின்ன தெளிப்பான்கள் மூலம் இதனைத் தடுக்க முடியாது. பெரிய வகை தெளிப்பான்கள் தேவை. அதே போல வேறு மாதிரியான தெளிப்பார்களைப் பயன்படுத்தி தாவரங்களை அவை விரும்பி உண்ணாமல் தடுக்க மருத்து அடிக்க வேண்டும். அப்போதுதான் இழப்பைத் தடுக்க முடியும். வேப்ப எண்ணெய் கலந்த வேதிப் பொருட்களைக் கலந்து பயன்படுத்தலாம். மேலும் போரிக் ஆசிட் கூட நாம் முயற்சித்து பார்க்கலாம். அதேநேரம் இதைப் போன்ற வேதிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் உணவுப் பொருட்களில் சில பாதிப்புகளும் வரலாம்” என்று அவர் கூறியுள்ளார்.