நாகாலாந்து மலைப்பகுதியில் காணப்பட்ட பெரிய புள்ளிச் சிறுத்தை!
இந்தியா மற்றும் மியான்மர் நாட்டு எல்லைப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள நாகாலாந்தின் மலைப்பகுதியில் பெரிய புள்ளிச் சிறுத்தைகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 3700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் இந்த சிறுத்தைகள் இருப்பதை கண்டுள்ளனர். அதற்கான போட்டோ ஆதாரத்தையும் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
The Cat News - Winter 2021 ஆய்வறிக்கையில் தங்களது ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த பெரிய புள்ளிச் சிறுத்தைகள் Wild Cats இனத்தில் மிகவும் சிறியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் உயிரினங்களில் இந்த சிறுத்தையும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான IUCN ரெட் லிஸ்டிலும் இது இடம் பெற்றுள்ளது. கிழக்கு நாகாலாந்தின் கிபிர் மாவட்டத்தில் உள்ள தனமிர் கிராமத்தில் இந்த சிறுத்தையில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இரண்டு பெரிய சிறுத்தைகள் மற்றும் இரண்டு குட்டிகள் என மொத்தம் நான்கு பெரிய புள்ளிச் சிறுத்தைகளை தற்போது ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சிறுத்தை பார்க்க மிகவும் பிரமிக்க செய்வதாகவும், அழகாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மரங்கள் அதிகம் நிறைந்த வெப்பமண்டல மழைக்காடுகளில் இந்த சிறுத்தைகள் இருப்பது வழக்கமாம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக மரங்களின் உச்சிப் பகுதியில் இந்த 4 சிறுத்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் அந்த சிறுத்தைகள் இனப்பெருக்கம் செய்து வருவதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.