Eco India: பற்றி எரியும் பூமியை பாதுகாப்பது எப்படி?

Eco India: பற்றி எரியும் பூமியை பாதுகாப்பது எப்படி?
Eco India: பற்றி எரியும் பூமியை பாதுகாப்பது எப்படி?

புதிய தலைமுறை டி டபுள்யூ எனும் புகழ்பெற்ற ஜெர்மனிய தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும், பச்சைப்பூமிக்கு பாத்தி கட்டும் காட்சி ஆவணம் ‘’ஈகோ இந்தியா’’(Eco India). இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் நிலவரத்தை நேரிடையாக ஆய்ந்து காட்சிப்படுத்தியிருக்கிறது ஈகோ இந்தியா (Eco India). இந்த நிகழ்ச்சி தனிமனிதன் முதல் அரசு வரை அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது. மட்டுமின்றி சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயலும் பசுமைப்போராளிகளை அடையாளம் கண்டு உலகிற்குச் சொல்கிறது.

’’கட்டுக்கடங்காத காட்டுத்தீ’’ - இவ்வருடத் தலைப்புச் செய்திகளில் ஒன்று. வாட்டி வதக்கிய அனல்காற்றுக்குப் பின் வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள கனடா மற்றும் அமெரிக்கப் பகுதியில் காட்டுத்தீ பரவியது. சைபீரியாவில் 1.5 மில்லியன் பரப்பளவுள்ள வனங்கள் மாதக்கணக்கில் பற்றி எரிந்தன. இவை தவிர மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள துருக்கி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளிலும் காட்டுத்தீயினால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டன. பருவநிலை மாற்றம்தான் வனங்கள் பற்றி எரியக் காரணம் என்கிறார்கள். உண்மை நிலை என்ன? இந்தச் சவால்களை எப்படி சமாளிப்பது? என்பது போன்ற கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் இதே கதைதான். காட்டுத்தீயும், அனல் காற்றும் தலைப்புச் செய்திகளில் திரும்பத்திரும்ப வருகின்றன. செய்தியாளர்கள் கீறல் விழுந்த இசைத்தட்டைப்போல அதையே சொல்கிறார்கள். கலிஃபோர்னியாவில் வனத்தீ அணைந்ததும் ஆஸ்திரேலியாவில் எரிய ஆரம்பிக்கிறது. இது இப்படியே தொடர வேண்டுமா? எங்கோ நடக்கிறது என்பதால் நாம் கவலைப்படாமல் கடக்க முடியாது. வனத்தீயால் ஒவ்வொரு வருடமும் நமது பூமியின் 3 சதவீதம் நிலப்பகுதி எரிந்து கரியாகிறது. பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள நகரங்கள் புகையால் சூழப்படுகின்றன. நாம் இவற்றை கட்டுப்படுத்த தவறினால் காற்றில் கலக்கும் கார்பன், மிக மோசமான பருவநிலை மாற்றத்தை உண்டாக்கிவிடும்.

வனத்தீயை கட்டுப்படுத்த நான்கு வழிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கடந்த இருபது வருடங்களாக பாதிக்கப்பட்ட வனங்களின் பரப்பளவு குறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் 2017ஆம் ஆண்டு புள்ளிவிபரம் உண்மைநிலையை சுட்டிக்காட்டுகிறது. நாம் தீ பரவக்கூடிய அந்த வனப்பகுதிகளை கட்டடங்களாகவும், பண்ணைகளாகவும், மாற்றிவிட்டோம். அதனால் வனத்திலிருந்து புறப்படும் தீ அப்பகுதிகளை கடக்கும்போது அதிக நேரம் எரிகிறது. இதனால் புகையின் அளவு அதிகமாகி காற்று மாசு அதிகரிக்கிறது.

கரியமில வாயுவும், மீத்தேனும் வெளியேறும்போது நிலப்பரப்பும் மேற்பரப்பும் சூடாகி நீண்டகால வறட்சியும், அனல்காற்றும் அதிகமாகின்றன. இதனால் எந்த நேரத்திலும் காட்டுத்தீ உண்டாகும் எனக் கூறுவதாக நினைக்க வேண்டாம். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. பருவ நிலை மாற்றம் காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. மக்களும் இதுபற்றி சிந்திக்க துவங்கியிருக்கிறார்கள். வீடு தீப்பற்றி எரிவதாக நினைத்து செயல்பட வேண்டும். ஏனென்றால் உண்மை அதுதான். ஒரு சின்ன தீப்பொறியும், காய்ந்த சருகுகளும் போதும். காட்டுத்தீ ஒரு கணத்தில் உண்டாகிவிடும்.

இதைத் தடுக்க நம்மிடம் இருக்கும் ஒரே வழி, பருவ நிலை மாற்றத்தை கட்டுக்குள் வைப்பதுதான். இன்னொரு வழியும் இருக்கிறது. அதுதான் தீயை தீயால் அணைப்பது. நமது நிலத்தை பூர்வகுடிகளும், பழங்குடிகளும் ஆட்சி செய்தபோது நெருப்பு என்பது ஒரு காக்கும் சக்தியாக இருந்தது. நெருப்பை நெருப்பால் அணைப்தை நாம் அவர்களிடம்தான் கற்றோம்.

எரியும் தீக்கு எதிர் திசையில் நாமே மூட்டிவிடும் அந்த எதிர் நெருப்பு, பரவி வரும் காட்டுத்தீயை மேலும் பரவாமல் தடுக்கும் ஒரு அரணாக இருந்தது. இதனால் சருகுகள் மட்டும் எரிந்து பசுமையான பகுதிகள் பாதுகாக்கப்பட்டன. பல்லாயிரம் வருடங்கள் நெருப்பை நெருப்பால் அணைப்பது சகஜமான ஒன்றாக இருந்தது. ஆனால் காலனி ஆதிக்கம் துவங்கியதும் அவர்கள் நெருப்பைக் கண்டு அஞ்சினார்கள். எதிர் நெருப்பு மூட்டும் முறையை கைவிட்டார்கள். நெருப்பை அணைப்பதைவிட எதிர் நெருப்பு மூட்டி அதனை கட்டுக்குள் வைப்பது பாதுகாப்பானது, சேதம் குறைவானது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நெருப்பை நெருப்பால் அணைக்கும் முறையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் உலகின் மற்ற பகுதிகளில் இது நடைமுறையில் இல்லை. நவீன மேற்கத்திய தீயணைப்பு முறை பழங்குடியினரின் தீயணைப்பு முறைக்கு நேர் எதிரானது. ஆனாலும் தீயை தீயால் அணைக்கக்கூடிய சூழல் வரும்போது, ஏதாவது ஆகிவிடுமோ என்று பயப்படுகிறார்கள். நெருப்பைக் கண்டு அஞ்சுகிற இந்த நூற்றாண்டில், பழங்குடியினரின் நிலம் பாதுகாப்பு முறைகள் பற்றிய புரிதல்கள் இல்லை என்பதில் ஆச்சர்யம் இல்லை.

தற்போது தீயணைப்பு வீரர்கள் நவீன தொழில்நுட்பங்களை பூர்வகுடிகளின் நுட்பங்களுடன் கலந்து முயற்சி செய்கிறார்கள். பருவநிலை மாற்றத்தை தாமதப்படுத்துவதன் மூலம் அடிக்கடி காட்டுத்தீ உண்டாவதை தாமதப்படுத்தலாம். ஆனால் ஏற்கெனவே மூண்டிருக்கும் காட்டுத் தீயை எப்படி அணைப்பது? வானிலை ஆராய்ச்சி மையங்களுக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும், நவீன செயற்கைக் கோள்கள் தரும் தரவுகள் பெரிதும் உதவுகின்றன. இதன்மூலம் நெருப்பு எரியும் இடங்களையும், அவற்றின் தீவிரத்தையும், அடுத்து எங்கே பரவும் என்பதையும் கணிக்கமுடிகிறது.

இருந்தாலும் அடர்ந்த கானகங்களுக்குள் செல்வது மிகவும் சிரமம். செயற்கைக்கோள்கள் அனுப்பும் படங்கள் தெளிவில்லாமல் இருக்கும். அதுபோன்ற தருணங்களில் தீயணைப்பு வீரர்கள் ட்ரோன் எனப்படும் சிறிய ரக விமானங்களை பயன்படுத்துகிறார்கள். அவை நெருப்பின் அருகே சென்று தெளிவான படங்களை படம்பிடித்து அனுப்புகின்றன. ஆனால் இத்தனை தொழில்நுட்பங்கள் இருந்தும் நெருப்பை அணைக்க முடியாவிட்டால் என்ன செய்வது? முதல் வேலையாக அப்பகுதியில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதிக்கு நகர்த்த வேண்டும். இரண்டாவது நீண்டகால பாதுகாப்பு திட்டம். பாதுகாப்பான தூரத்துக்கு அழைத்துச்சென்று கான்க்ரீட் தளமும், சுவரும் உள்ள குடியிருப்புகளாக மாற்றித்தர வேண்டும். புகையால் உண்டாகும் மூச்சுத்திணறலை தவிர்க்க காற்று வடிகட்டும் கவசத்தை வாங்கித்தரவேண்டும்.

ஆனால் என்னதான் தற்காப்பு முறைகளை செய்தாலும், பூமிப்பந்து இன்னும் 3 டிகிரி அதிகமாக சூடாகும் என்கிறார்கள். அந்த சமயத்திலும் இந்த வீடுகள் பாதுகாப்பாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பின் மேல் உள்ள பயம் விலகி, நவீன தொழில்நுட்பத்துடன் திடீர் காட்டுத் தீயை அணைக்கும் முறையை நாம் கற்றுவருகிறோம். இது ஒரு நல்ல செய்திதான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com