\
Earth May Survive the Sun's Death, Suggests New Scientific Study
வளிமண்டலம்Pt web

பூமியின் எதிர்காலத்தை மாற்றிய ஆய்வு.. பேரழிவை சந்திக்கப்போகும் சூரியன்.. விஞ்ஞானிகள் கூறுவதென்ன?

சூரியன் தனது ஆயுளின் இறுதிக்கட்டத்தை எட்டும்போது பூமி முற்றிலும் அழிந்துவிடும் என்ற நீண்டகால நம்பிக்கைக்கு புதிய ஆய்வு ஒன்று மாற்றுக் கருத்தை முன்வைத்துள்ளது. ஆய்வில் என்ன விவரம் கூறப்பட்டுள்ளது என பார்க்கலாம்.
Published on

பெல்ஜியத்தின் KU Leuven பல்கலைக்கழக வானியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மாட்ஸ் எசெல்டியர்ஸ் தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சியாளர் குழு ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு Astronomy & Astrophysics அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

விஞ்ஞானிகளின் கணிப்பின்படி, இன்னும் சுமார் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் மையத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்துவிடும். அதன் பிறகு சூரியன் தற்போதைய அளவை விட பல நூறு மடங்கு பெரிதாக விரிந்து முதலில் Red Giant ஆகவும், பின்னர் AGB நட்சத்திரமாகவும் மாறும். இறுதியில் அதன் வெளிப்புற அடுக்குகள் அனைத்தும் சிதறி, White Dwarf எனப்படும் சிறிய ஆனால் மிகவும் அடர்த்தியான நட்சத்திரமாக சுருங்கிவிடும்.

இதுவரை, இந்த கட்டத்தில் சூரியன் மிகப்பெரிய அளவுக்கு விரிவடைந்து புதன், வெள்ளி மற்றும் பூமி ஆகிய கோள்களை முழுமையாக விழுங்கிவிடும் என்று விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். ஆனால், இந்த புதிய ஆய்வு அந்த கணிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரியனைப் போன்ற இறுதி கட்டத்தில் இருக்கும் L2 Puppis என்ற நட்சத்திரத்தை ஆய்வு செய்ததுடன், பல்வேறு கணினி மாதிரிகளையும் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், பூமியின் எதிர்காலம் இரண்டு காரணிகளுக்கு இடையிலான சமநிலையைப் பொறுத்தே அமையும் என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு சூழலில், சூரியன் பெரிதாக விரிவடையும்போது அதன் ஈர்ப்பு விசை பூமியை தன்னருகே இழுத்துச் சென்று இறுதியில் விழுங்கிவிடும். ஆனால் மற்றொரு வாய்ப்பில், சூரியன் தனது வெளிப்புற அடுக்குகளை வேகமாக இழப்பதால் அதன் மொத்த நிறை குறையும். இதன் காரணமாக ஈர்ப்பு விசையும் பலவீனமடைந்து, பூமி மெதுவாக சூரியனிலிருந்து தொலைவான சுற்றுப்பாதைக்கு நகர்ந்து தப்பிக்கக்கூடும்.

earth
earthFB

இதுகுறித்து ஆய்வின் ஆசிரியர் மாட்ஸ் எசெல்டியர்ஸ் கூறுகையில், "சூரியனின் ஈர்ப்பு விசை மேலோங்குகிறதா அல்லது அதன் நிறை இழப்பு அதிகமாகிறதா என்பதை பொறுத்தே பூமியின் எதிர்காலம் தீர்மானிக்க்கப்படும். ஈர்ப்பு விசை மேலோங்கினால் பூமி விழுங்கப்படும். ஆனால் நிறை இழப்பு அதிகமாக இருந்தால், பூமி சூரியனிலிருந்து விலகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு, பூமியின் எதிர்காலம் குறித்து இதுவரை நிலவி வந்த கருத்துகளுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளதுடன், சூரியக் குடும்பத்தின் நீண்டகால பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Earth May Survive the Sun's Death, Suggests New Scientific Study
ஈரானில் காமேனியின் மோதிர கை.. நான்கே நாளில் எழுந்த பிரம்மாண்ட சிற்பம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com