கோடை வெயிலிலிருந்து சரும பிரச்னைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்கள் அறிவுரை!

கோடை வெயிலிலிருந்து சரும பிரச்னைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்கள் அறிவுரை!
கோடை வெயிலிலிருந்து சரும பிரச்னைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்கள் அறிவுரை!

கோடை வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

கோடை காலத்தில் வெயில் என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலானது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என்றும், வெப்ப காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களை கோடையின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் என்னென்ன செய்ய வேண்டும் என இந்திய அரசானது, அனைத்து மாநிலங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இந்த சூழலில் கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள், சருமம் சார்ந்த பிரச்னைகள் போன்றவை உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. உடலில் மிகப்பெரிய உறுப்பாக இருப்பது தோல். நோய் தொற்றுகள் எளிதில் உடலினுள் புகாமல் தடுக்கும் பணியினை தோல் செய்து வருகிறது. வெயில், குளிர் காலங்களுக்கு ஏற்ப உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்க தோல் முக்கிய பணியாற்றி வருகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த தோலில் கோடை காலத்தில் நோய் பாதிக்கப்படாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இது குறித்து சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை தோல் நோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் விக்னேஷ் கார்த்தி கூறுகையில், “கோடை காலத்தில் அதிகமாக உடலில் இருந்து வியர்வை வெளியேறும் என்பதால், அவ்வப்போது வியர்வையை துடைத்து, நீரால் தோலை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு முறை குளிக்கலாம். உள்ளாடைகள் வியர்வையால் ஈரமாகிவிட்டால் அதனை விரைவாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

முழு உடலையும் மறைக்கும் அளவிலான தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். உடலுக்கு தேவையான நீர் சத்துள்ள பழச்சாறு, தண்ணீர் அதிக அளவில் அருந்த வேண்டும். குறிப்பாக வெயில் காலத்தில் தேமல், வியர்க்குரு, படர்தாமரை போன்ற நோய் பாதிப்புகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. தோலில் நோய்கள் ஏற்படுவதில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்” என்றார்.

சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை தோல் நோய் மருத்துவ நிபுணர் வசந்த சேனா கூறுகையில், “வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது குடை பயன்படுத்துவது நல்லது. மனித உடலுக்கு சூரியன் ஒளி அவசியமான ஒன்றுதான். ஆனால் அதிக வெப்பம் அல்லது யுவி ரேஸ் எனக்கூடிய அல்ட்ரா வயலட் கதிர்கள் தோலை பாதிக்கும். அதனால் அதிக வெயில் இருக்கும் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம். ஒருவேளை வெயிலில் செல்ல வேண்டிய சூழல் இருந்தால், சன் ஸ்கிரீன் எனும் தோலை பாதுகாக்கும் கிரீம்களை பயன்படுத்தலாம்.குறிப்பாக கோடைகாலத்தில் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். உடலின் வெப்பம் அதிகரிக்காத வகையில் பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும். மிகவும் தடிமனான 'ஜீன்ஸ்' ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஜீன்ஸ் ஆடைகளை அணிவதால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். ஆகவே இந்த காலகட்டத்தில் ஜீன்ஸ் ஆடைகளை உடுத்தாமல் இருப்பது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com