கடலூர்: விவசாய நிலத்தில் குப்பை கிடங்கு தொடங்குவதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்
கடலூரில் விவசாய நிலத்தின் மத்தியில் குப்பை கிடங்கு தொடங்கப்படவிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான மக்கள் விவசாய நிலத்தில் குடியேறும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடலூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்ந்து குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகளில் கொட்டப்பட்டு வந்ததால் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தற்போது நகராட்சி குப்பைகளை ஆற்றின் கரைகளில் கொட்டியது. இது ஆற்றின் சுற்றுச்சூழலை சீரழித்து வருகிறது என்பதால், அதற்க்கும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் குப்பைகள் கொட்ட இடமின்றி, கடலூர் நகரத்தையடுத்து உள்ள நெல்லிக்குப்பம் அருகே உள்ள வெள்ளப்பாக்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வெள்ளப்பாக்கம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம், இந்நிலம் விவசாய நிலமாகும். விவசாய நிலங்கள் நிறைந்த பகுதிகளில் குப்பை கிடங்கு அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதை முன்னிறுத்தி அவர்கள் இந்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அம்மக்கள் கூறியபோது, “இங்கு குப்பை கிடக்கு அமைக்கப்படுவதால், விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே விவசாயம் செய்யும் இடத்தில் குப்பை கிடங்கு இருக்கவே கூடாது” என்றனர். எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமன்றி, கிராமத்தில் உள்ள விவசாயிகள் பலர் குப்பைக் கிடங்கு தொடங்கவிருப்பதாக சொல்லப்பட்ட இடத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவிவருகிறது. காவல்துறையினர் அதிகமாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ‘இந்த பகுதியில் குப்பை கிடங்கு அனுமதி வழங்கக்கூடாது. விவசாயம் பாதித்தால் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும்’ என தெரிவித்து வருகின்றனர்.