11 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீவிரமடையும் சூரிய கரும்புள்ளிகள் - சூரியகாந்த புயலுக்கு வாய்ப்பு
11 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீவிரமடையும் சூரிய கரும்புள்ளிகள் சூரியனில் ஏற்படத் துவங்கியுள்ளதாக கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பூமியின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள, வான் இயற்பியல் ஆய்வகத்தின் பிரதான ஆய்வாக சூரியனை கண்காணிப்பது உள்ளது. சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள், சூரியகாந்த புயல் இந்த ஆண்டு அதிக அளவில் வீச வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் விண்வெளி சாட்டிலைட்டுகள் மற்றும் செல்போன் அலைவரிசைகள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில், சூரியனை நான்கு தொலைநோக்கிகள் உதவியுடன், தீவிரமாக கண்காணித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
11 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் சூரிய கரும்புள்ளிகள், கடந்த சில நாட்களாக சூரியனில் தோன்றி வருவதாகவும், இனி வரும் நாட்களில் அதன் வீரியம் அதிகரித்து, சூரிய காந்த புயலாக மாறி, பூமிக்கு வரும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பூமியின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இனிவரும் நாட்களில் சூரியனைத் தொடர்ந்து கண்காணித்து அதன் தாக்கத்தை பதிவுசெய்து, ஆய்வுகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.