அமிர்தி வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - மழை பெய்ததால் காட்டுத்தீ தவிர்ப்பு

அமிர்தி வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - மழை பெய்ததால் காட்டுத்தீ தவிர்ப்பு
அமிர்தி வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - மழை பெய்ததால் காட்டுத்தீ தவிர்ப்பு

வேலூரில் அமிர்தி வனப்பகுதியில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. உள்ளிருந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தக்கசமயத்தில் மழை வந்ததால் பெரும் காட்டுத் தீ விபத்து தடுக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டை சேர்ந்த ஆனதன் உட்பட 2 பேர் வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையான ஜவ்வாது மலை தொடரில் அமைந்துள்ள அமிர்தி சிறு மிருகக்காட்சி சாலைக்கு இன்று (14.05.2022) மாலை காரில் (இன்டிகோ) சென்றிருக்கின்றனர். அங்கிருந்து திரும்பும்போது அமிர்தி வனப்பகுதியில் சென்றுகொண்டிருந்த காரின் முன்பக்க என்ஜினில் திடீரென புகை வந்துள்ளது. இதனால் அச்சம் அடைந்த இருவரும் காரைவிட்டு இறங்கி முன்பக்கம் திறந்து பார்த்திருக்கின்றனர்.

அப்போது திடீரென கார் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான இருவர் காரை விட்டு ஓடியுள்ளனர். கார் சிறிது நேரத்தில் பெறும் சத்தத்துடன் வெடித்து முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் இதுகுறித்து வேலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். விரைந்து சென்ற வேலூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். நடு வனப்பகுதியில் கார் தீப்பற்றி எரிந்ததால் திருவண்ணாமலை மாவட்ட ஜமுனாமத்தூர் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயில் 100 டிகிரி ஃபாரன் ஹீட் அளவை தாண்டி கொளுத்தி வருகிறது. இதனால் வனப்பகுதிகள் காய்ந்து போயுள்ளது. இந்நிலையில் கார் பெரும் வனப்பகுதிக்கு நடுவே செல்லும் சாலையின் ஓரத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. கார் வெடித்ததால் அதில் இருந்து கிளம்பிய தீ வனப்பகுதிக்குள் விழுந்து செடிகள் தீப்பிடிக்க தொடங்கியுள்ளது. அச்சமயம் பார்த்து திடீரென மழை பெய்ததால் தீ மேலும் வனத்துக்குள் பரவாமல் அணைந்துள்ளது. திடீரென பெய்த மழையினால் பெரும் காட்டுத் தீயும் தடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com