வசந்தகாலத்தை வரவேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை!.. இனப்பெருக்கத்தை துவக்கிய பறவைகள்

வசந்தகாலத்தை வரவேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை!.. இனப்பெருக்கத்தை துவக்கிய பறவைகள்
வசந்தகாலத்தை வரவேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை!.. இனப்பெருக்கத்தை துவக்கிய பறவைகள்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பறவைகளின் இனப்பெருக்கத்திற்கான வசந்த காலம் துவங்கியது. கொடைக்கானலில் உள்ள பல்வேறு வகையிலான வனக்குருவிகள் கூடுகள் கட்டி, முட்டைகள் இட்டு, குஞ்சு பொறிக்கும் காலம் துவங்கியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இளவரசியாக திகழும் கொடைக்கானல் மலைப்பகுதி, கிழக்கு நோக்கி தனது மலை வளத்தை கொண்டுள்ளதால், கோடை காலம் என அழைக்கப்படும் வசந்த காலம், சற்று முன்னரே இப்பகுதியில் துவங்கும். அதிக குளிரும் இல்லாமல், சுட்டெரிக்கும் வெயிலும் இல்லாமல் இதமான சூழல் நிலவும் வசந்த காலத்தின் அறிகுறிகளாக, வசந்த கால பூக்களான நீலகிரி மலர்கள், கொன்றை மலர்கள், வேங்கை மலர்கள், ஈழத்தலரி மலர்கள் என பல்வேறு வகையிலான மலர்களும் கொத்துக்கொத்தாக பூக்கத்துவங்கியுள்ளன.

பூக்கள் அதிக அளவில் பூக்கத் துவங்கியுள்ளதால், மலைத்தேன் பருவமும் களைகட்டத் துவங்கி, பழங்குடிகள் தேன் சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை சூழல் வசந்தத்திற்கு மாறியுள்ளதால், பறவை இனங்களும் இனப்பெருக்கத்திற்காக வசந்த காலத்தை வரவேற்கத் துவங்கியுள்ளன. புலியூர் என்ற அழகிய எழில் கொஞ்சும் மலைப்பகுதியில், புல்வெளிச்சூழல் நிறைந்த வளம்கொண்ட சோலை வனப்பகுதிகள், நீர் வளங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளதால், அங்கு பறவைகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

மேலும் இப்பகுதிகள் வாகன இரைச்சல் மற்றும் மனித நடமாட்டமும் அதிம் இல்லாமல், அமைதியாக உள்ளதால், பறவைகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடமாக உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் கூறுகின்றனர். இந்த ஆண்டு வசந்த காலத்தின் அறிகுறிகள் துவங்கியது முதலே, வனக்குருவிகள் அப்பகுதியில் உள்ள மரங்களில் கூடுகட்டத் துவங்கி, முட்டைகள் இட்டு, குஞ்சு பொறிக்கும் காட்சிகள் நிகழத்துவங்கியதாக அவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, மரங்களில் வனக்குருவிகள் கூடுகட்டி குஞ்சுகளுக்கு உணவு ஊட்டி, அவற்றை அடைகாத்து பேணும் காட்சிகளையும் பார்க்க மக்கள் கூடுவதாக பழங்குடிகள் கூறுகின்றனர்.  இந்த வசந்த காலப்பருவ இனப்பெருக்கம், ஜூன் மாத இறுதி வரை தொடர்ந்து நிகழும் எனவும், குஞ்சுகளுக்கு இறக்கைகள் முளைத்து பறக்கும் வரை, தாய் தந்தை பறவைகள் அவற்றை அடை காக்கும் எனவும், அதன் பின்னர் கட்டிய கூட்டை விட்டுவிட்டு, வேறு இடம் சென்று விடும் என அப்பகுதி பழங்குடிகள் கூறுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் கோடை பருவத்தை, மலைப்பகுதிகளில் அனுபவிக்காத பயணிகளுக்கு, எதிர்வரும் கோடை வசந்த காலப்பருவம், கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை, இயற்கை எழில் கொஞ்சும் சூழலோடு மகிழ்விக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com