இந்திய பருவமழையை பாதிக்கும் 'கோல்ட் பிளாப்’.. அமெரிக்க பல்கலைக் கழக ஆய்வு எச்சரிக்கை!
வட அட்லாண்டிக் கடலில் ஏற்பட்டுள்ள ‘அட்லாண்டிக் கோல்ட் பிளாப்’ என்ற விசித்திரமான குளுமைப் பகுதி, இந்திய பருவமழையைத் திசைதிருப்பி வருவதாகப் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகுவதால் அட்லாண்டிக் கடல் நீரோட்டம் பலவீனமடைந்து இக்குளுமை ஏற்படுவதாகவும் இது வளிமண்டலக் காற்று அலைகள் மூலம் இந்தியப் பருவமழைப் பொழிவை மாற்றி அமைக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக்கழக விஞ்ஞானி நிம்மகண்டி மகேந்திரா தலைமையிலான ஆராய்ச்சிக் குழு கூறுகிறது.
இதனால், 1999 முதல் வடமேற்கு இந்தியாவில் மழை 25 சதவீதம் அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது; அதேநேரம், விவசாயப் பகுதியான இந்தோ-கங்கைச் சமவெளியில் மழை குறைந்து வறட்சி நிலவுகிறது. தற்போதைய வானிலை ஆராய்ச்சிக் கணினிகளால் இப்பொழுது நடக்கும் இந்த அட்லாண்டிக் கடல் மாற்றங்களையே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவை கணித்துக் கூறும் எதிர்கால வானிலை அறிக்கைகளை நாம் எப்படி முழுமையாக நம்ப முடியும் என்று விஞ்ஞானி மகேந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.
