”மக்னா” யானைகள் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவையா? ஏன் இவ்வளவு மூர்க்கமாக இருக்கிறது?

”மக்னா” யானைகள் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவையா? ஏன் இவ்வளவு மூர்க்கமாக இருக்கிறது?
”மக்னா” யானைகள் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவையா? ஏன் இவ்வளவு மூர்க்கமாக இருக்கிறது?

தந்தம் இல்லாத ஆண் யானைதான் மக்னா யானை என அழைக்கப்படுகிறது.   

தமிழகத்தில் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது மக்னா யானை. அண்மையில் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, கோவை வந்த மக்னா யானை, மதுக்கரை அருகே ரயில் பாதையை கடக்க முயன்ற போது கேரளா செல்லக் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதை கண்ட வனத்துறையினர் யானை மீது ரயில் மோதாமல் இருக்க சப்தம் எழுப்பியும் பட்டாசுகளை வெடித்தும் விரட்டுவதற்கு முயற்சித்தனர். அப்படியும் நகராமல் யானை டிராக்கில் நின்று கொண்டிருந்தது. நல்வாய்ப்பாக ரயில் யானை அருகே வருவதற்கு நொடி பொழுதின் போது டிராக்கை விட்டு கடந்து சென்றது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

யானைகளில் எத்தனை வகை? 

உலகளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆப்பிரிக்க யானைகள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிய யானைகள் எண்ணிக்கையில் மிக அதிகமாகவும் காணப்படுகிறது. அதுவும் இந்தியாவில், குறிப்பாக தென்னகத்தில் யானைகள் அதிகம் இருப்பதாக 2016 இல் நடத்தப்பட்ட ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல மக்னா வகை யானைகள் எண்ணிக்கையும் தென்னக்ததில்தான் அதிகம். மக்னா யானைகளை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

மக்னா யானை என்றால் என்ன?

இதுவொருபுறமிருக்க, மக்னா யானை என்றால் கூறப்படும் பரவலான கருத்தொன்று வெகுகாலமாக நிலவுகிறது. அதில் "மனிதர்களில் சிலரைப் போல மூன்றாம் பாலினமாக பிறந்த யானைகள்தான் மக்னா" என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மூன்றாம் பாலினம் யானைதான் மக்னா என்பது தவறான புரிதல் என்கின்றனர் சூழலியாளர்கள்.

தந்தம் இல்லாத ஆண் யானைதான் மக்னா யானை என அழைக்கப்படுகிறது. மனிதர்களில் ஒரு ஆணின் அடையாளமாக மீசை எப்படி குறிப்பிடப்படுகிறதோ, அதேபோல்தான் ஆண் யானை என்றால் அதன் தந்தமே அடையாளமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறிருக்க, மரபணு குறைபாட்டால் தந்தம் இல்லாத தன்மையோடு வளரும் இந்த மக்னா யானைகளை ஆணும் அல்லாத, பெண்ணும் அல்லாத மூன்றாம் பாலின யானையாக தவறுதலாக புரிந்துகொள்ளப்படுகிறது. மரபணு குறைபாட்டால் தந்தம் இல்லாமல் வளர்கிறதே தவிர, மற்ற ஆண் யானைக்கு இருக்கும் எல்லா குணாதியங்களையும் மக்னா யானை கொண்டிருக்கும் என்கின்றனர் காட்டுயிர் ஆர்வலர்கள்.  

ஆண் யானைக்கு தந்தத்தில்தான் வலிமை. ஆனால், இந்த மக்னா யானைக்கு உடம்பெல்லாம், குறிப்பாக துதிக்கையில் தந்தத்தின் பலம் உண்டு. ஆயிரம் யானைகளுக்கு ஒன்று 'மக்னா' யானையாக பிறக்கிறது எனக்கூறும் காட்டுயிர் ஆய்வாளர்கள், மக்னா யானைகள் பொதுவாகவே மூர்க்கம் நிறைந்தவையாக இருக்கும் என்கின்றனர்.

தந்தம் இல்லா யானைகளை பெண் யானைகள் விரும்புவதில்லை!

பொதுவாக பெண் யானைகள் தந்தம் கொண்ட ஆண் யானைகளுடன் மட்டுமே இணை சேருகின்றன. தந்தம் இல்லாத மக்னா யானைகளுடன் பெண் யானைகள் இணை சேர்வதில்லை. மேலும் இவற்றை ஆண் யானைகள் தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதில்லை. தந்தமற்ற மக்னா யானைகள் பிற பெண் மற்றும் ஆண் யானைகளின் கூட்டங்களிலிருந்து விலக்கி வைக்கப்படுவதால், இவைகள் தனியாக வாழ்கின்றன என்கின்றனர் வனத்துறையினர். 

ஏன் மக்னா மூர்க்கமாக இருக்கின்றது?

தந்தமற்ற மக்னா யானையால், எந்தக்கூட்டத்திலும் சேர்ந்து வாழ முடியாததால் இவை மூர்க்கத்தனத்தனமாக நடந்து கொள்ளும். சில சமயங்களில் எதிர்ப்படும் மனிதர்களையும் மற்ற விலங்குகளையும்  தாக்கும் குணம் கொண்டவையாக இருக்கும் என்கிறார்கள் யானை ஆர்வலர்கள். இப்படி மூர்க்கத்தனமானது என்றும் பலரையும் கொன்றதாக சொல்லக்கூடிய மக்னா யானைகளைக்கூட பிடித்து முகாம்களில் வளர்த்த போது இயல்பாகவும் இருந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com