\

180 டன் எடையுடன் பூமியின் மிகப் பெரிய விலங்காக திகழும் நீலத் திமிங்கலம், கடலில் துள்ளிக் குதித்துப் பாடும் கூனல் முதுகுத் திமிங்கலம் ஆகியவை, கடல்சார் சுற்றுச்சூழல் சமநிலையைக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் திமிங்கல இனங்களின் பட்டியலில் அடங்கும். 30 மீட்டர் நீளமும் 180 டன் எடையும் கொண்ட நீலத் திமிங்கலம் பெரிய உடலமைப்பைக் கொண்டிருந்தாலும், இது 'க்ரில்' எனப்படும் சிறிய வகை இறால்களையே முதன்மை உணவாக உட்கொள்கிறது.
கூனல் முதுகுத் திமிங்கலம் எனப்படும் ஹம்ப்பேக் திமிங்கலம் கடலில் துள்ளிக் குதித்து விளையாடுவதிலும், விசித்திரமான ஒலிகளை எழுப்பிப் பாடுவதிலும் புகழ்பெற்றவை.
ஸ்பெர்ம் திமிங்கலம் உலகிலேயே மிகப்பெரிய பற்களைக் கொண்ட வேட்டையாடிகும். மேலும் ராட்சத கணவாய் மீன்களை வேட்டையாடுவதற்காக கடலுக்கு அடியில் 2 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை செல்லும் திறன் கொண்டவை.
ஓர்கா என்று அழைக்கப்படும் கில்லர் திமிங்கலம் உண்மையில் டால்பின் குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை, கூட்டமாகச் சேர்ந்து திட்டமிட்டு வேட்டையாடும் அதீத புத்திசாலித்தனம் கொண்டவை.
மிக நீண்ட தூரம் இடம்பெயரும் பாலூட்டியான சாம்பல் திமிங்கலம் ஆர்க்டிக் கடலில் இருந்து மெக்சிகோ வரை ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்கிறது.
முற்றிலும் வெள்ளை நிறத்தில் காணப்படும் பெலுகா திமிங்கலம் மற்ற திமிங்கலங்களை போலல்லாமல் தன் கழுத்தை அனைத்துப் பக்கங்களிலும் திருப்பும் வசதி கொண்டவையாகும். மேலும் விதவிதமான சத்தம் எழுப்புவதால் இவை கடலின் வானம்பாடிகள் என அழைக்கப்படுகின்றன.
ஆர்க்டிக் பனிப்பிரதேசங்களில் வாழும் போஹெட் திமிங்கலம் தங்களின் தடிமனான மண்டையோட்டால் கடினமான பனிக்கட்டிகளை உடைக்கும் திறன் கொண்டவை. மேலும், இவை 200 ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடியவை என சொல்லப்படுகிறது.
பெருங்கடல்களின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியப் பங்காற்றும் இந்த திமிங்கலங்கள் பிளாஸ்டிக் மற்றும் கடல் மாசுபாட்டால் ஆபத்துகளை சந்திப்பதாக தெரிவிக்கின்றனர் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள்.