மேலாண்மைப் படிக்க ஆர்வம் காட்டும் பெண்கள்... மாணவர் சேர்க்கையில் உயரும் எண்ணிக்கை
இந்தியாவில் உயர்கல்வியில் பாலின சமத்துவம் என்பது மெல்ல உயர்ந்து வருகிறது. கோழிக்கோடு ஐஐஎம் கல்வி நிலையத்தில் 2020 - 22 கல்வியாண்டில் 492 மாணவர்களில் 52 சதவீதம் மாணவிகள் எம்பிஏ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். பெங்களூரு ஐஐஎம்மில் கடந்த 2019 - 21 கல்வியாண்டில் 37.4 சதவீதம் மாணவிகள் சேர்ந்திருந்தனர். அதுவே அந்த காலகட்டத்தில் சாதனை அளவாகப் பார்க்கப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் எனப்படும் ஆறு முக்கியத்துவம் வாய்ந்த ஐஐஎம்களில் மாணவிகள் 33.5 சதவீதம் அளவுக்குச் சேர்ந்துள்ளனர். மேலாண்மைப் படிப்புகளில் அதிக பெண்கள் சேரும் சாதனையை முதல்முறையாக 2013 - 15 ஆம் கல்வியாண்டில் எட்டியதாகக் குறிப்பிடுகிறார் கோழிக்கோடு ஐஐஎம் இயக்குநர் தேபசிஸ் சாட்டர்ஜி. அந்த ஆண்டில் 54.29 சதவீத பெண்கள் சேர்ந்திருந்தனர்.
"இன்று அதிக அளவில் பெண்கள் செல்வாக்குள்ள பதவிகளில் உள்ளார்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதில் பங்கேற்கிறார்கள். அதனால் எம்பிஏ படிப்புகளில் ஆர்வம் காட்டுகிறார்கள். நல்ல மேலாளர்கள் மற்றும் தலைவர்களாக உருவாகும் பயணத்தில் அவர்களுக்கு மேலாண்மைக் கல்வி நிலையங்கள் உத்வேகத்தை ஏற்படுத்துகின்றன" என்கிறார் எம்பிஏ மாணவர் ஒருவர்.
மேலாண்மைப் பள்ளிகளில் அதிக அளவில் பெண்கள் சேர்வது குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் பேராசிரியர் ஆசிஷ் மிஸ்ரா, "தலைமைப் பதவிக்கும் மேலாண்மைப் பணிகளுக்கும் வலிமை தருகிறவர்களாக பெண்கள் உள்ளனர். அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்களாக உள்ளனர். மக்களை அரவணைத்துச் செல்லுதல், மற்றவர்கள்மீதான பச்சாதாபம் போன்ற குணங்களில் ஆண்களைவிட பெண்கள் மேம்பட்டவர்களாக உள்ளனர். இதை பாலின சமத்துவமாக மட்டும் பார்க்கமுடியாது" என்கிறார்.