அரசுப் பள்ளிகளை மக்கள் ஏன் புரிந்துகொள்ளவேண்டும்? ஆசிரியர்கள் குழுவின் புதுமை முயற்சி

அரசுப் பள்ளிகளை மக்கள் ஏன் புரிந்துகொள்ளவேண்டும்? ஆசிரியர்கள் குழுவின் புதுமை முயற்சி

அரசுப் பள்ளிகளை மக்கள் ஏன் புரிந்துகொள்ளவேண்டும்? ஆசிரியர்கள் குழுவின் புதுமை முயற்சி
Published on

ஃபேஸ்புக் என்பது சமூகவலைதளம். ஆனால் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அதுதான் போர்க்களம். அரசுப் பள்ளிகள் பற்றி மக்களிடையே படிந்துள்ள தவறான கருத்துக்களை தூசு தட்டி சுத்தம் செய்வதற்கு ’ஏத்ரீ’ என்ற ஆசிரியர்கள் குழு ஃபேஸ்புக் நேரலை செய்துவருகிறது. தினமும் ஒரு அரசுப் பள்ளி பற்றி ஆசிரியர்கள் பங்கேற்கும் அற்புதத் திட்டம். இதுவரை 50 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். அதனால் என்ன நடந்தது? என்பது குறித்து அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்  குழுவின் ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர் உமா, புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டி. 

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களிடையே ஒரு குழுவைத் தொடங்கியதன் நோக்கம் என்ன?  

அரசுப் பள்ளிகளின் மீது அவநம்பிக்கையும் தவறான புரிதலும் ஏற்படுத்தி  குறை சொல்வது  சமூகத்தின் அன்றாடப் பணிகளில் ஒன்றாகிவிட்ட காலகட்டம் அது. 2015 ஆம் ஆண்டு. ஆனால் இது உண்மையல்ல, இயல்பாகவே  அரசுப்பள்ளிகளில் அர்ப்பணிப்புடன்  பணி செய்துவரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இருப்பதை உணர்த்தும்விதமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு ( A3 - ஏத்ரீ).

இந்தக் குழுவில் ஆசிரியர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா?

மாநில அளவிலான இந்த அமைப்பில் தங்கள் பள்ளிகளை  சிறப்பாக நடத்தும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என பாகுபாடு இல்லாமல் இணைந்துள்ளனர். தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என எல்லாவகையான பள்ளிகளிலும் இருந்தும் ஆசிரியர்கள் உள்ளனர். ஏறக்குறைய தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் சேர்ந்து செயல்படும் தன்னெழுச்சியான அமைப்பாக இருக்கிறது. சங்கங்கள் மற்றும் அரசியல் சார்பற்று மாணவர் நலன் விரும்புகின்ற ஆசிரியர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன் இணைத்து  பயணிக்கும் அமைப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது.

குழுவின் செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள்…

மாநிலத்தின் ஏதாவது ஒரு மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆசிரியர் கூடல் விழாவை நடத்திவருகிறோம். அந்தந்த  மாவட்ட ஏத்ரீ  உறுப்பினர்கள் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு ஏற்பாடு செய்வார்கள். முதல் கூடல் விழா  திருச்சியில்  நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து 150 ஆசிரியர்கள் தன்னார்வமாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆசிரியர்தின கூடல்விழாக்களாக  கொல்லிமலை, திருநெல்வேலி,  தஞ்சாவூர்,  ஈரோடு ஆகிய ஊர்களில் நான்கு ஆண்டுகள் நடந்தன.    

ஆசிரியர்களின் கற்பித்தல் மேம்பாட்டுக்கான புதிய செயல்பாடுகளை குழு செய்துவருகிறதா?

ஆசிரியர்களின் அனுபவங்களைப் பகிரும் தளமாக, சவால்களைச் சந்தித்த கற்பித்தல் அனுபவங்கள், மாணவரது  கற்றல் விளைவுகள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து உற்சாகம் பெற்று மாற்றத்தை நோக்கிப் பயணிக்க உதவியாக இருக்கிறது. இன்று நிறைய பெண் ஆசிரியர்கள் துணிச்சல், தன்னம்பிக்கையுடன் இன்று சமூக பொதுத்தளங்களில், ஊடகங்களில் வெளிப்படுவதற்கும்  வழிகாட்டிவருவது  கூடுதல் சிறப்பு. தங்கள் பணி சார்ந்த திறன்களை எந்தெந்த வகைகளில்  மேம்படுத்திக்கொள்ளலாம்  என  நேரடி அனுபவங்களையும் உருவாக்கித்தருகிறது.

நவீன தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறதா?

கற்பித்தல் - கற்றல் செயல்பாட்டில் கணினி வன்பொருள், மென்பொருள் கையாளுதல் குறித்த ஐசிடி (இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி) பயிற்சியை மாநில அளவில் விழுப்புரம், கோவை, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடத்தியுள்ளோம். எத்தனையோ கிராமப்புற ஆசிரியர்கள் தொழில்நுட்பப் பயிற்சிகளில் கலந்துகொண்டு பயனடைந்து, மிகப்பெரிய மாற்றங்களை தங்கள் வகுப்பறைகளில் நிகழ்த்தியுள்ளனர். இது மட்டுமல்ல எந்த நேரத்திலும் தங்கள் அனுபவங்களை மனமுவந்து மற்றவருக்கு வழங்குபவர்களாகவும் உறுப்பினர்கள் உள்ளனர்.  

அனுபவங்களைப் பகிர்தல் என்றால் என்னவென்று தெளிவாகச் சொல்லமுடியுமா?

உதாரணமாக, இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர், தனது கணினி பயன்பாட்டுத் திறனை கற்பித்தலில் பயன்படுத்துவதை சென்னை ஆசிரியருக்கு வழங்குவார். கரூர் மாவட்ட தலைமை ஆசிரியர், தன் பள்ளிக்கட்டமைப்பை அரசு நிதியின்வழி வளப்படுத்தியுள்ளதை குழுவில் உள்ள மற்ற பள்ளிகளுக்குத் தெரிவித்து வழிகாட்டுவார். இதுபோன்ற பகிர்வுகள் அவ்வப்போது தொடர்கின்றன.

உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு வாட்ஸ் அப் குழுக்கள் எந்த வகையில் உதவியாக உள்ளன?

தொடர் செயல்பாடுகளைச் செய்துவரும்போது ஒவ்வொன்றிற்கும் தனித்தனி வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி பணியாற்றுகிறோம். பின்னர் புதிய  குழுக்கள் ஆரம்பிக்கப்படும். அரசுப் பள்ளிக்குழந்தைகளிடையே வாசிப்பை தொடர் செயல்பாடாக எடுத்துச்செல்ல க்ரியா பதிப்பகத்தின் உதவியுடன் 500க்கும் அதிகமான பள்ளிகளுக்கு சிறுவர் புத்தகங்களையும் ,  தமிழ் அகராதியையும் வழங்கினோம்.    

இதுவரையில் 12 தலைப்புகளில்  ஆறு லட்சம் ரூபாய்  மதிப்பில் ஏத்ரீ  குழு பள்ளிகளுக்கு புத்தகங்களை வழங்கியுள்ளது. அதற்காகவே பிரத்யேக A3 + Crea புத்தகங்கள் என்ற வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளன. புத்தகங்களைப் பெற்ற குழுவின் ஆசிரியர்கள் குழந்தைகளின்  வாசிப்பு அனுபவத்தை காணொளிகளாக, படங்களாக, குரல் பதிவுகளாக பகிரும்போது கொடையாளர்கள் மகிழ்கின்றனர். அதேபோல தும்பி சிறுவர் இதழையும் இலவசமாக பள்ளிகளுக்கு வழங்கினோம். 

ஆசிரியர்கள் மேம்பாடு என்ற நிலையைத் தாண்டி பள்ளிகளுக்கு உதவி, மக்களுக்கு உதவி என குழுவின் பணிகள் தொடர்கின்றனவா? 

பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகளை பெரிய நிறுவனங்களிடமிருந்து கொடையாகப் பெற்று, தேவையுள்ள கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு குழு வழங்கிவருகிறது. இதுவரை சுமார் 15  லட்சம் ரூபாய்  மதிப்பில் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்குப் பொறுப்பேற்று ஆண்டுதோறும் சிலரை கல்லூரிகளில் சேர்க்கும் பணியும் தொடர்கிறது.

ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஏத்ரீ குழுவின் பணிகள் எப்படி தொடர்ந்தன?

கொரோனா காலத்தில் பெரும்பாலான மக்கள் வேலையிழந்து பொருளாதார சிக்கலில் துவண்டுள்ளனர். தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கமுடியாத நிலை.  இந்தச் சூழலில், அரசுப் பள்ளிகள் மீதான பொதுமக்களின்  பார்வை மாறவேண்டும் என விரும்பினோம்.  உண்மையாகவே சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளிகளை மையப்படுத்தி ஏத்ரீ புதிய பயணம் -  அசத்தும் அரசுப் பள்ளிகள்  என்ற குழுவின் முகநூல் பக்கத்தில் ஜூன் முதல் நேரலையில் ஆசிரியர்களின் அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.  

நேரலையில் தினமும் ஒரு தலைப்பில்  ஆசிரியர்கள் பேசுகிறார்களா?

மென்திறன் வழியே மலரும் கற்றல்திறன் பள்ளி, அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் அரசுப் பள்ளி, குறள்நெறி வளர்க்கும் அரசுப் பள்ளி, முன்னாள் மாணவர்களால் பொலிவுபெறும் அரசுப் பள்ளி, பட்டியலின மாணவர்களை உலகறியச் செய்யும் அரசு நலத்துறைப் பள்ளி, தன்னிறைவு பெற்ற கிராமத்துப் பெண்கள்  அரசுப் பள்ளி, கலைவழியே கற்பித்தல் பள்ளி  என தினமும் ஒரு தலைப்பில் ஆசிரியர்கள் அசத்துவதை முகநூல் நேரலையில் பார்க்கமுடியும். ஒவ்வொரு பள்ளி குறித்தும் அந்தந்த ஆசிரியர்கள் பகிர்ந்துகொள்ளும்போது பரவலாக மற்ற ஆசிரியர்களும், பொதுமக்களும், முன்னாள் மாணவர்களும் ஊடகத்துறையினரும் கவனித்து வியப்புடன் பாராட்டுகின்றனர்.  

நேரலையால் பள்ளிகளுக்கு நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?

விருதுநகர் மாவட்ட ஆசிரியர் ஜெயமேரி  நேரலை முடிந்த மறுநாளே ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார். அவரது நேரலையைக் கண்டு தீப்பெட்டி தொழில்புரியும்  மாணவர்களது பெற்றோர்களின் வறுமையைப்போக்க, தன்னார்வலர்கள்  உதவிகள் செய்துள்ளனர். அக்குழந்தைகளின் குடும்பங்களுக்கு அன்றாடத் தேவைகளுக்கான உணவுப்பொருள், நிதியுதி அளித்திட முன்வந்த நிகழ்வு தொலைக்காட்சியில் வந்துள்ளதையும் பதிவிட்டார்.    

திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் காந்திராஜனின் நேரலையை அமெரிக்கவாழ் தமிழர் பார்த்துவிட்டு, அந்த ஆசிரியரது 5  மாணவர்களை தத்து எடுத்துக்கொள்வதாகவும், உயர்கல்விவரை கல்விச்செலவை ஏற்பதாகத் தெரிவித்தார். அத்துடன் ஒரு மாணவரது தற்போதைய கல்விக்கு 10 ஆயிரம் ரூபாயை அனுப்பிவைத்துள்ளார். இப்படி எதிர்பாராத  பல உதவிகள் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குக்  கிடைத்துவருகின்றன.

ஆனால் நமது நோக்கம் அரசுப் பள்ளிகளை மக்கள் நாடவேண்டும். அங்கு பணிபுரியும் ஆசிரியர்களது திறன்களை அறிந்துகொள்ளவேண்டும் என்பதுதான். பொதுவாக மக்களின் பொதுப்புத்தியில் பதிந்துவிட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றிய எதிர்மறை எண்ணங்களுக்கு மாற்றாக களநிலவரம் என்ன என்பதை ஆவணமாக்கும்  முயற்சியே ஃபேஸ்புக் நேரலையின் முக்கிய நோக்கம்.

ஃபேஸ்புக் நேரலை இணைப்பு:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com