அனுமதியின்றி பள்ளி நடத்தினால் ஏன் கைது செய்யக்கூடாது?: உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் அனுமதியின்றி பள்ளி நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 2009-ம் ஆண்டிற்கு பிறகு மனுதாரர் பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்காததற்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறினார். மேலும், அனுமதியில்லாத பள்ளிகளை மூட அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிபதி குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி கிருபாகரன், 13 கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் எத்தனை? எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படுகிறது? அனுமதியில்லாமல் பள்ளிகள் நடத்துபவர்களை கைது செய்ய ஏன் விதிகளை வகுக்கக் கூடாது? என்பன உள்ளிட்ட 13 கேள்விகளுக்கு ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.