“உண்மையில் கல்வி யாருக்குத் தேவை?”  தேசிய விருது பெற்ற ஆசிரியர் பெர்ஜின் சிறப்பு பேட்டி

“உண்மையில் கல்வி யாருக்குத் தேவை?” தேசிய விருது பெற்ற ஆசிரியர் பெர்ஜின் சிறப்பு பேட்டி

“உண்மையில் கல்வி யாருக்குத் தேவை?” தேசிய விருது பெற்ற ஆசிரியர் பெர்ஜின் சிறப்பு பேட்டி
Published on

தமிழகத்தில் கணினிவழிக் கல்வியில் பல நூறு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தியவர் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் பெர்ஜின். கணினிவழிக் கல்வியில் ஏற்படுத்திய மாற்றங்களுக்காக மைக்ரோசாப்ட் மற்றும் குடியரசுத் தலைவர் விருதுகளையும் பெற்றவர். அவரிடம் பேசினோம்.

உங்களுடைய ஆரம்பக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?

இயற்பியலில் கல்லூரிப்படிப்பை முடித்ததும் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் இயற்பியல் ஆசிரியராக இருந்தேன். ஆசிரியர் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதேவேளையில் பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைக்குத் தேர்வாகியிருந்தேன். இரண்டும் இருவேறு பாதைகள். ஒன்று ஆராய்ச்சி. மற்றொன்று ஆராய்ச்சி செய்யும் மாணவர்களை உருவாக்குவது. ஆராய்ச்சி செய்வதைவிட மாணவர்களை உருவாக்கும் பணியை தொடரவே விரும்பினேன்.

பள்ளிக்குச் செல்லாமல் நின்ற பல மாணவர்களை பள்ளியில் மீண்டும் சேர்த்த அனுபவம் எப்படி?

உவரி, குட்டம், கூட்டப்பனை, கூடங்குளம் போன்ற கடற்கரை கிராமங்களில் பள்ளிக்குச் செல்லாமல் நின்ற மாணவர்களைக் கண்டறிந்து  பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டோம். இங்கு ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக்கு வரும் மாணவர்கள், பிறகு மீன்பிடிக்கச் சென்றுவிட்டனர். நாங்கள் ஊருக்குள் சென்றாலே மறைந்துவிடும் இந்த குழந்தைகளைத் தேடி கண்டுபிடித்து, உண்டுஉறைவிடப் பள்ளிகளில் சேர்த்து படிக்கவைத்தோம். நூற்றுக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்களையும்  உண்டுஉறைவிட பள்ளிகளில் சேர்த்தோம். பின்னர் பொதுப்பள்ளியில் சேர்த்துவிட்டதும், அவர்களில் சிலர் கல்லூரிப்படிப்பை தொடர்ந்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள்.

தமிழகத்தில் செயல்வழிக்கற்றல் அறிமுகமான காலத்தில் உங்களுடைய பணிகள் எப்படி இருந்தன?

கன்னியாகுமரியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியில் இருந்தபோது, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழகம் முழுவதும் செயல்வழிக்கற்றல் அறிமுகமானது. இது வகுப்பிலுள்ள மாணவர்களின் கற்றல் திறன்களை தனித்தனியாக கண்காணிக்க ஒரு அருமையான கற்றல்முறை.

கூகுள்  ஸ்பிரட்ஷீட்டை பயன்படுத்தி ஐந்தாம் வகுப்புவரை படித்த அனைத்து அரசுப் பள்ளி குழந்தைகளின் தகவல்களையும் ஒருங்கிணைத்து அவர்களின் கற்றலை  மாவட்ட அளவில் மேலாண்மை செய்தேன். மாவட்ட ஆட்சியராக இருந்த இராஜேந்திர ரத்னூ உற்சாகப்படுத்தி வழிகாட்டினார். அனைத்து மாணவர்களுக்கும் செயல்வழிக் கற்றல்முறையை எடுத்துச் சென்றதற்காக மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியர் விருதும் கிடைத்தது.

கணினிவழிக் கற்றல் மூலமாக மாணவர்களின் கற்றல் திறன்கள் மேம்பட்ட அனுபவத்தைச் சொல்லுங்கள்?

நான் கணினிவழிக் கற்றல் ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிந்தேன். 2007 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு கணினிகள் வீதம் 18 நடுநிலை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால், அதைப் பயன்படுத்தி என்ன செய்யலாம் என தெரியாமல் இருந்தனர். அந்தப் பள்ளிகளுக்குச் சென்று ஆங்கிலம் பயிற்றுவிக்கும் குறுந்தகடுகள், அறிவியல் காணொளிகள், கணிதம் பயிற்றுவிக்கும் ஜியோஜிப்ரா போன்ற மென்பொருள்களைப்  பயன்படுத்த பயிற்சியளித்தேன். மாணவர்களின் கற்றல் அதிகரித்ததோடு, கணினிகளைக் கையாளும் திறன்களையும் பெற்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டு விருதுகளை வழங்கியுள்ளதே? 

மாணவர்கள் தாங்கள் கணினி மூலம் உருவாக்கிய படைப்புககளை க்ளாக்ஸ்டார்  போன்ற சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்தார்கள். மாணவர்கள் பவர்பாயிண்ட் மூலம் செய்த படைப்புகளைக் கண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், அவர்களை உருவாக்கிய எனக்கு 2009, 2010 ஆம் ஆண்டுகளில் புதுமை ஆசிரியர்களுக்கான இரண்டு விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியது. தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அமெரிக்காவின்  வாஷிங்டனில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பும் கிடைத்தது.

அடுத்து கணினிவழி கற்றல்மையத்தில் பயின்ற குழந்தைகளின் செயல்திட்டத்திற்கு இண்டெல் நிறுவனம் மாநில அளவில் விருது வழங்கியது. 2011 செப்டம்பர் 5 ஆம் தேதியன்று மத்திய அரசின் குடியரசுத் தலைவர் விருது கிடைத்ததைப் பெருமையாக உணர்கிறேன்.

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் கல்விநிலை எப்படி இருக்கிறது? அவர்களுடன் பணியாற்றியது பற்றிச் சொல்லுங்கள்?

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்விப்பணியில்  மாவட்ட ஒருங்கிணைப்பாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். மறக்கமுடியாத நாட்கள். பள்ளிக்குச் செல்லவும் முடியாமல் வீட்டிலும் கற்கமுடியாமல் மாவட்டம் முழுவதும் இருந்த குழந்தைகளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். காதுகேளாத குழந்தைகள்,  வாய்ப்பேச சிரமப்படுபவர்கள், பார்வையற்றவர்கள், மனவளர்ச்சிக் குறைபாடுள்ளவர்கள்,  மூளைமுடுக்குவாதம், தசைநார்த் தேய்வு போன்று  பலவகைகளில் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுடன் பயணித்தபோது தான், உண்மையில் கல்வி யாருக்கு தேவை என்பதை உணர்ந்தேன்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் நாம் கூடுதல் கவனம் கொள்ளவேண்டுமா?

சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். காது கேட்க சிரமப்படும் குழந்தைகளுக்கு அதிகமாக காட்சி உள்ளீடுகள் தேவைப்பட்டன. மாவட்ட ஆட்சியரின் நிதியுதவியில் சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு செவித்திறன குறைந்த மாணவர்களுக்குப் பயிற்சியளித்தோம். மூளை முடக்குவாதம் உடைய குழந்தைகள் தனது தலையை நேராக தூக்கிப்பிடிக்க சிரமப்படுவார்கள். தொலைக்காட்சிப் பெட்டிகளை சற்று உயரத்தில் மாட்டிவைத்ததால், அதைப் பார்ப்பதற்காக தலையை தொடர்ந்து மேலே தூக்கும்போது கழுத்துப் பகுதி உறுதியானதாக மாறியது.  

தசைநார் தேய்வால் பாதிப்படைந்த அப்துல்லா என்ற மாணவன்,  இடுப்புக்குக்கீழே உணர்ச்சியற்ற நிலையில் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை. அந்த மாணவரை அருகிலுள்ள பள்ளியில் சேர்த்து வீட்டிலிருந்து படிப்பதற்கு ஏற்பாடு செய்தேன். நான் ஸ்கைப் மூலம் அவரது சந்தேகங்களைத்  தீர்த்துவைத்தேன். பத்தாம் வகுப்பில் 428 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தற்போது வீட்டில் அமர்ந்துகொண்டே வீடியோ எடிட்டிங் மூலம் சம்பாதிக்கிறார்.

சாயல்குடி பள்ளியில் செய்த மாற்றங்கள் என்ன?

கடந்த 2013 ஆம் ஆண்டு இயற்பியல் ஆசிரியராக சாயல்குடி பள்ளிக்கு வந்தேன். பதினோராம் வகுப்பு மாணவர்கள் செய்த ”Enhance science learning through ExpEYES” என்ற செயல்திட்டத்தை சிறப்பாக வழிநடத்தியமைக்கு NCERT தேசிய புதுமை ஆசிரியருக்கான விருது அளித்தது. இயற்பியல் சோதனைகளை expEyes என்ற கருவியைக்கொண்டு கணினியுடன் இணைப்பதே இந்த செயல்திட்டம். மாணவர்களின் அறிவியல் சோதனைகளின் வெளியீட்டை கணினியின் திரைகளில் பார்க்கமுடியும்.

இந்திய அளவில் தேர்வுசெய்யப்பட்ட பத்து செயல்திட்டங்களில் ஒன்று. பொறியியல் கல்லூரியில் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை பிளஸ் டூ வகுப்பிலேயே கற்றுக்கொள்கிறார்கள். 2013 முதல் 2019 வரை ஏழு ஆண்டுகள் பிளஸ் டூ இயற்பியல் பாடத்தில் 100 சதவீத தேர்ச்சியை கொடுத்துள்ளேன். பிறமாவட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை  எடுக்கிறேன். பாட ஆசிரியர்கள் இல்லாத மாணவர்களுக்கு அது பேருதவியாக உள்ளது.

தேசிய அளவில் மாணவர்களுக்கு ஐசிடியைப் பயன்படுத்தி காணொளிகளை உருவாக்கும் குழுவில் உறுப்பினராக உள்ளேன். மூன்று ஆண்டுகளில் 45 வீடியோக்கள் தயாரித்துள்ளேன். இவை அனைத்தும் http://nroer.gov.in/welcome என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சுந்தரபுத்தன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com