Teachers' Day | பெண் கல்விக்கு போராடிய இந்தியாவின் முதல் ‘ஆசிரியை’ சாவித்ரிபாய் பூலே!

ஆசிரியர் தினம் என்றாலே, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள்தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவரையும் தாண்டி இன்று பேசப்படுபவர், இன்னும் பேசப்பட வேண்டியவர் சாவித்ரி பாய் பூலே. யார் இவர்? பார்ப்போம்..!
சாவித்ரி பாய் பூலே
சாவித்ரி பாய் பூலே முகநூல்

டாக்டர் ராதாகிருஷ்னன் போலவே, ஆசிரியர் தினத்தன்று நினைவு கூறவேண்டிய பல ஆசிரியர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் சாவித்ரிபாய் பூலே. யார் இந்த சாவித்ரி பாய் பூலே? என்னதான் அப்படி செய்திருக்கிறார்? காண்போம்....

சாவித்ரி பாய் பூலே
”நாங்களும் தேவதைகள் தான்” என்ற எண்ணத்தை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு ”ஆசிரியர் தின வாழ்த்துக்கள்”

சாவித்ரி பாய் பூலே என்பவர் இந்தியாவின் முதல் ஆசிரியை ஆவார். மேலும் ஒரு சிறந்த பெண் சீர்த்திருத்தவாதி. அதுமட்டுமல்ல... பெண் கல்வி, பெண் முன்னேற்றம், ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது, கைம்பெண்களுக்கு உதவுவது என்று சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டும் - உரிமை மறுக்கும்பட்டும் இருக்கும் பெண்களுக்களுக்காக குரல் கொடுத்தவர்.

சாவித்ரி பாய் பூலே :

  • இவர் இந்தியாவின் மகாராஷ்ரா மாநிலத்தில் உள்ள நைகாவ் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். 1840 ஆம் ஆண்டு ஜோதிராவ் பூலே என்பவரை தனது 9 வயதில் (குழந்தை திருமணம்) மணந்து கொண்டார். பிறகு பூனே சென்ற இவருக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படவே தன் கணவரின் துணைக்கொண்டு எழுதவும், படிக்கவும் ஆரம்பித்தார். இதற்காக அகமது நகர் மற்றும் பூனேவில் ஆசிரியர் பணியை மேற்கொண்ட இவர் தனது 4 வது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

  • ‘கல்வி நிச்சயம் ஒருவரது எண்ணத்தை மாற்ற கூடிய வல்லமை படைத்தது’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இவரின் செயல்கள் அனைத்தும் பெண் கல்வியை சார்ந்தும் பெண் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதை நோக்கியும் இருந்தது. பெண் உரிமைக்கான தன் பயணத்தை கணவரின் துணைக் கொண்டு ஆரம்பித்தார்.

சாவித்ரி பாய் பூலே
19-ம் நூற்றாண்டிலேயே பெண்கள் பள்ளி துவக்கியவருக்கு கூகுள் கவுரவம்
  • இந்த தம்பதியினர் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்களின் மேம்பாட்டிற்கு பெரிதும் பங்களிக்கும் வகையில் பங்காற்றினர்.

  • குறிப்பாக சாவித்ரி பாய் பூலே கைம்பெண்களின் மறுமணத்தை ஆதரித்தும் குழந்தை திருமணத்தை ஒழிக்கவும் போராடியுள்ளார். பெண் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

முதல் பெண் ஆசிரியர்:

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான (ஆசிரியை) சாவித்ரி பூலே, தன் கணவர் ஜோதிராவுடன் இணைந்து 1848 ஆம் ஆண்டு பெண்களுக்கான ஒரு பிரத்யேக பள்ளியை நிறுவினார். பெண் கல்வியும் உரிமையும் மறுக்கப்பட்ட அக்காலத்தில் முதல் பெண் ஆசிரியராக இவர் பணி செய்தது, அன்றைய தேதியில் மக்களின் எதிர்ப்பினையும், கோபத்தினையும் சம்பாதிக்க காரணமாக அமைந்தது. அதையும் வெற்றிகரமாக கடந்தார் சாவித்ரி பூலே!

1851-ல் பெண்களுக்காக மூன்று பள்ளிகளை தொடங்கினார் இவர். அதில் மொத்தம் 150 மாணவர்கள் சேர்ந்தனர். இப்பள்ளிகள் சிறந்த கற்பித்தல் மற்றும் பாடத்திட்டத்தின் நற்பெயரை அக்காலத்தில் பெற்றன.

முதல் பெண் ஆசிரியர்
முதல் பெண் ஆசிரியர்முகநூல்
  • இதோடு மட்டும் நின்றுவிடவில்லை. 1853 ஆம் ஆண்டு தன்னை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் தன் கணவரோடு இணைந்து பெண்களுக்கான கல்வி கூடங்களை நிறுவ ஆரம்பித்தார் சாவித்ரி பூலே.

இதற்கிடையே செல்லும் வழியிலெல்லாம் அவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்மீது சானம் வீசி எறியப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளதாம். இருந்தாலும்கூட, ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதரவற்ற குழந்தைகள், கைம்பெண்களுக்கு கல்வி கற்பித்து.. அவர்களுக்கு தங்கும் விடுதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். இப்படி எந்தெந்த வகையில் எல்லாம் பெண் முன்னேற்றத்திற்கு உதவ முடியுமோ அதையெல்லாம் செய்துள்ளார் அவர்.

பிளேக் நோய் பாதிப்பு:

ஒடுக்கப்பட்ட வகுப்பினர் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பிய தருணத்தில், அவர்களுக்காக தங்கள் வீட்டின்முன் முற்றத்தில் கிணற்றை தோண்டினார் இவர். அந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1852 ஆன் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கத்தால் மாநிலத்தின் சிறந்த ஆசிரியராக அறிவிக்கப்பட்டார். கல்வி துறையில் அவர் ஆற்றிய பங்கிற்காக மேலும் பல விதமான பாராட்டுக்களையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றார்.

பிளேக் நோய் பாதிப்பு:
பிளேக் நோய் பாதிப்பு:முகநூல்

1890 ஆம் ஆண்டு இவருக்கு உறுதுணையாக இருந்த இவரின் கணவர் மரணித்தார். அதன்பின்னும் மனம் தளராமல் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் குரல்கொடுத்து வந்தார் அவர்.

மஹாராஷ்டிராவில் மூன்றாவது உலகளாவிய தொற்றுநோயான புபோனிக் பிளேக் தோன்றியபோது, ​​​​சாவித்ரிபாய் தனது தத்துமகன் யஷ்வந்துடன் சேர்ந்து 1897 இல் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதற்காக ஒரு சிறிய மருத்துவனையை திறந்தார்.

அப்போது பாண்டுரங் பாபாஜி கெய்க்வாட் என்பவரின் 10 வயது குழந்தை, பிளேக் நோயால் அவதிப்படுவதை சாவித்ரிபாய் கேள்விப்பட்டுள்ளார். மனம் தாங்காமல், விழிப்புணர்வின்றி குழந்தையை சுமந்து சென்றுள்ளார். அப்போது சாவித்ரி பாய்க்கும் பிளேக் நோய்த்தொற்று ஏற்பட்டது .

இறப்பு:

இதனால் மார்ச் 10, 1897 அன்று இயற்கை எய்தினார் சாவித்ரி பாய் பூலே. இவர் தன் வாழ்நாளில் இரண்டு கல்வி அறக்கட்டளைகள், நேட்டிவ் ஃபிமெல் ஸ்கூல் மற்றும் மஹர்ஸ், மாங்க்ஸ் மற்றும் எட்செட்ராஸ் கல்வியை மேம்படுத்துவதற்கான சங்கம் என பலவற்றை தொடங்கியிருக்கிறார்.

கல்வி மறுக்கப்பட்ட அக்காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே முதல் பெண் ஆசிரியை என்ற சிறப்பினை பெறுவது சாதாரண விஷயமல்ல. தன் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மட்டுமன்றி, பலரின் வாழ்விலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த தன்னை அர்ப்பணித்த இந்த ஆசிரியை சாவித்ரி பாய் பூலே நிச்சயம் சரித்திரம் சொல்லும் ஒரு சாதனை பெண்மணிதான்.!

சாவித்ரி பாய் பூலே
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் “சாவித்திரிபாய் புலே”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com