வால்பாறை: நெட்வொர்க் பிரச்னையுள்ள மாணவர்கள் வீட்டுக்கே சென்று பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்!
வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் வீடு தேடி சென்று ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் மேல் நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி என்று மொத்தம் 88 பள்ளிகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெறுந்தொற்று பாதிப்பால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறக்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
பள்ளி திறக்காமல் இருப்பதால், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சில பகுதிகளில் நெட்வொர்க் பிரச்னை எழுவதால் சிக்கல் உருவாகியுள்ளது. அந்தவகையில் வால்பாறை மலை பகுதியில் அதிகமாக நெட்வொர்க் பிரச்னை உள்ளது. இதனால் அப்பகுதி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துக்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இவர்களின் சிக்கலை உணர்ந்து, அப்பகுதி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வீடு தேடி சென்று ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். குறிப்பாக வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இது நடக்கிறது. இங்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 80 மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோணா தடுப்பு நடவடிக்கை ஒருபக்கம் இருந்தாலும், நெட்வொர்க் பிரச்னை காரணமாக இவர்கள் கல்வி கற்க முடியாமல் வீட்டில் இருந்து முடங்கி இருக்கிறார்கள்.
இதனால் மாணவர்கள் வீட்டுக்கே நேரடியாக சென்று ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கராணி, முத்துலட்சுமி உள்ளிட்ட சிலர், கொட்டும் மழையில் வன விலங்கு நடமாட்டத்திலும் மாணவர்களின் வீட்டுக்கே சென்று தினமும் 1 மணி நேரம் பாடங்களை சொல்லி தருகிறார்கள். காலை 9 மணிக்கு பள்ளிக்கு வருவது போல மாணவர்களின் வீடுகளை தெரிந்து கொண்டு அவர்கள் வீட்டுக்கு சென்று வீட்டின் திண்ணையில் அப்பகுதியில் உள்ள மாணவர்களை வரவழைத்து பாடங்களை சொல்லி தருகிறார்கள் இவர்கள். இதனால் மாணவ மாணவியரின் பெற்றோர் மிகவும் மகிழ்ந்து, ஆசிரியர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
- ம.சேது மாதவன்