மருத்துவக் கலந்தாய்வை விரைந்து நடத்தக் கோரும் மனு: அவசர வழக்காக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வை விரைந்து நடத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வை விரைந்து நடத்தக் கோரி மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவிகித இட ஒதுக்கீட்டை நிராகரித்து தீர்ப்பு வெளியான பின்னரும் கூட தமிழக அரசு மருத்துவக் கலந்தாய்வை தொடங்கவில்லை என கூறியிருந்தார்.
ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மருத்துவக் கலந்தாய்வை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையும் மனுவில் சுட்டிக் காட்டியுள்ள நளினி சிதம்பரம், மருத்துவக் கலந்தாய்வு தாமதமாவதால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார். எனவே நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கலந்தாய்வை விரைந்து நடத்த தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அம்மனுவில் கூறியிருந்தார். மாணவர்களின் நலன் கருதி இந்த வழக்கை விரைந்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், இதனை அவசர வழக்காக நாளை விசாரிக்கிறது.