”தேர்வுக்கு தயாராகுங்கள்.. தள்ளிப்போகும் என நினைக்காதீர்கள்”: யுஜிசி திட்டவட்டம்.
கோரோனா பொதுமுடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். உச்சநீதிமன்ற விசாரணையின் காரணமாக தேர்வுகள் நிறுத்தப்படும் என்று மாணவர்கள் கருதக்கூடாது என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்துக்குள் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தவேண்டும் என்ற பல்கலைக்கழக மானிய குழுவின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 10 தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. மனுதாரர்களில் ஒருவரான அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில் “ கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை ஆன்லைன் வழியாக நடத்தாலாம் என்ற யுஜிசி வழிகாட்டுதல்களின்படி பார்த்தால், பல கல்லூரிகளில் முறையான ஆன்லைன் வசதிகளே இல்லை. அதனால் இது முழுமையாக சாத்தியமில்லை. தேர்வுகளை ரத்து செய்வதால் ஒன்றும் வானம் இடிந்து விழுந்துவிடாது. எனவே தேர்வுகள் நடத்துவது குறித்து மாநில அரசுகளே பேரிடர் மேலாண்மை சட்டப்படி முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்”என்றார்
ஏற்கனவே மஹாராஸ்டிரா மாநில அரசு, தனது மாநில அரசு நடத்தும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்துள்ளது. இந்த வழக்கின் மனுதாரரான மஹாராஸ்டிரா அமைச்சர் ஆதித்ய தாக்கரே “ இந்த சூழலில் தேர்வு என்பது மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சிதைக்கும்: என்றார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா “ மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்வுகள் நிறுத்தப்படும் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது. இது மாணவர்களின் நலனுக்கானதே” என்றார்

